கற்கட்டு

நீ மட்டும் இல்லாமல் போயிருந்தால்
நிலை தடுமாறிப் போயிருப்பார்கள்
என் பாட்டனும் பாட்டியும்

நீ இருந்த நம்பிக்கையில் தான்
நெடுந்தூரப் பயணம் யாவும்

மூன்று கற்களால் உன்னைக் கொண்ட நீ
முகம் தெரியாத பலரின்
முனகல் வலி தீர்த்த
முதிர்ந்த அனுபவசாலி.

மூன்று ஒன்றாகி
முயன்றாயோ கற்பிக்க
அமைதியும் பொறுமையும் வலிமையையும் ?

வழி நெடுகிலும் நின்று
வரவு பார்த்திருந்தாய்...
வந்தோரை உபசரித்து
வழியனுப்பி வைத்தாய்...
பிரதிஉபகாரம் கேட்காமல்
பேதையாய் நின்றாயே !

தலையால் சுமந்து வந்ததைத்
தாங்கிக் கொண்டாய்
தனக்காய் ஏதுமின்றித்
தியாகியாய் நின்றாயே !

சும்மாட்டில் தாங்கி வந்ததைச்
சும்மாவே தாங்கிக்கொண்டாய்,
சுமை தாங்கி வந்தோர்க்குச்
சுகம் தர நீ வழிவகுத்தாய் !

கால் வலித்து வந்தோரின்
கண்ணீர் துடைத்த
கண்ணியவாதி !
நின்றுகொண்டே நீ செய்த
தவம் தான் என்ன ?

நிறுத்தப்பட்ட கற்கட்டாய்
நீயிருந்து உதவினாய்
ஏனோ
நிலைக்காமல் போய்விட்டாயே ...

காற்றிலும் மழையிலும்
கனத்த வெயிலிலும்
காலங்கள் கடந்து நின்றதனால்
களைத்துபோய் இன்று
காணாமல் போய்விட்டாயா ... ?

எழுதியவர் : மீ.மணிகண்டன் (20-Jun-14, 5:26 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : sumai thaanki
பார்வை : 102

மேலே