பெண்ணாய் பிறந்திட வேண்டும்
அரிது , அரிது
மானிடராய் பிறத்தலரிது
அதனினும் அரிது
பெண்ணாய் பிறத்தல் !
நிரப்பவியலா
கோடிட்டவிடங்களை நிரப்ப
நானொரு
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
அறியப்படா
வாழ்க்கை ரகசியங்களின்
உட்புறமாக
நுழைந்து சென்று
செயற்கை சாயமழித்து
எனதியல்பான
அந்தரங்கம் பூசி -
தாயெனும் கோவிலாய்
நானே மாறி
என் கருவறையையொரு
சிசுவறையாய் மாற்றி
உயிருக்குள் உயிர் சுமக்கும்
உர்ச்சவதினாலொரு
சக்தியாய் நானே மாறிட
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
ஐம்புலன்களிலும்
பொறி நிரப்பும்
பூரணத்துவம் பெற்ற
பெண்மையின்
பூரிப்பிலும் , பிரகாசத்திலும்
வெளிப்படும்
அந்த மூன்று நாட்களின்
வலியறிந்து -
ஏனைய வாழ்வின் நாட்களை
அள்ளியணைத்திட
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
இன்னொருவர்
கைபிடித்துக் கொடுத்து
கண்ணீரோடு
வழியனுப்பித் தயங்கி
நிற்கும்
தந்தையின் தோள் சாய -
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
மோகங்கள் , தாபங்கள்
முற்றுப் பெறா சஞ்சலங்கள்
முழுவதும் தெளிவற்ற
முக்கால சூத்திரங்களறிய
ஆடவர் தொடவொண்ணா
பெண்மையின் ஆழங்களோடு
தாய்மைக்காய் கிடப்பேன்
தாலி கொண்டு
மனைவியெனும் பந்தமேற்று
அறிமுகமில்லா ஆணுடன்
ஒரே கட்டிலில்
என்றுணர்கையில்
ஆண்மையையும்
வென்ற உவப்படைய
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
மருத்துவமனையில்
பால் கட்டிவலிக்குமெனது
மார்புகளை
என் பிஞ்சு உருஞ்சுகையில்
அசூசைக்கும் , கிளர்ச்சிக்குமிடையில்
உதிரத்தைப் பாலாக்கி
ஒன்றாய் உயிர் திரட்டி
தொப்பூள் கொடிவழி
உணவளித்த -
பிரபஞ்சம் கடந்த
பிரமத்தின் வாசனையை
பால் கவிச்சியிலுணரும்
பெண்மையின்
பெருமை நுகர
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
வாசற் பெருக்கி , நீர் தெளித்து
கோலமிட்டு
மாலையில் விளக்கேற்றி
பட்டுப்புடவை சர சரக்க
மங்கள விழாக்களில்
மற்றவர் கைகூப்பும்
பெண்மையின் கர்வம்
உணர
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
கணவனொரு கரை
குழந்தைகளொரு கரை
இரண்டிற்குமிடையே
தொங்கு பாலமென
சுக சோகச் சுமைதாங்கி
ஆடி அலுப்புற
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
நட்சத்திரங்களை
காவலுக்கேவி விட்டு
நிலா துயிலும்
நள்ளிரவில் -
நோயுற்ற சிசுவினை
மடி சுமத்தி
நாளங்கள் கொதிக்க
ஒருக்களித்து
பசுந்தளிரின் தலை தடவி
தூங்கா விளக்கோடு
மறுவிளக்காய் விழித்திருக்க
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !
எல்லாவற்றிலும் மேலாய்
நிறமிகள் கூடிய
திசுக்களிலும்
நரம்புகளோடும் சதைகளிலும் -
ரசாயனக் கலவை நிறைந்து
ரத்தமோடும் உடலெந்திரம்
அறுத்து -
உருவம் , நிறம் , மணம்
சுவையழித்து
ஐம்புலன்களிலும் உள்ளொளி பெருக்கி
ஊனுருக உயிருருகி
உலக உயிரினங்கள்
வணங்கிடும் தாயாகிட
நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும் !