அவனும் அவளும் ஒரு சிறுகதை 2
அவனும் அவளும் .. சிறுகதை 2
கிரிங் .. கிரிங் .. வாயிற்படியில் இருக்கும் அழைப்பு மணியை யாரோ அடிக்கும் சத்தம் கேட்டு கண்கள் விழித்தான் அவன்.
படுக்கையில் எழுந்து அமர்ந்து, கண்கள் இரண்டையும் கசக்கிவாறே, "இந்த அதிகாலை வேளை, வந்திருப்பவர் யாராக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டே, வாயிற்கதவை திறக்க, வாயில் வெற்றிலையை குதப்பியவாறே நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.
நீயா .. இந்த நேரம் ஏம்மா இங்கே வந்தே .. பொழுது இன்னும் புலரவில்லை என்றதும் அவள்,
எனெக்கு நாள் முழுக்க பல வேலைகள் இருக்கு. அங்கு போய் விட்டால் உன்னெ எப்ப வந்து பாக்கறதாம். நீ வேற ஜோலிக்கு போயிடுவே .. எப்போ வருவேன்னு யாருக்குத் தெரியும். அதான் விடிய றதுக்கு முன்னே வந்தேன் ன்னு சொல்லவும்,
சரி சரி வெளியில நின்னுக் கிட்டே பேசவேண்டாம். உள்ளே வா என்று அழைத்துக் கொண்டு சென்று சோஃபாவில் உட்காரச் சொன்னான்.
அதெல்லாம் வேண்டாம் .. நான் கீழயே குந்திக்கறேன் என்று சொல்லி அவள் தரையில் அமர்ந்து கொண்டாள்.
கொஞ்ச நேரம் பொறுத்திரு. நான் போயி முகம் கழுவிவிட்டு வருகிறேன் என்று சொல்லி, வாஷ் பேஸின் அருகில் போய், பல் விளக்கி, முகம் கழுவி வந்து அவள் எதிரில் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டான்.
வாயில் இருந்த வெற்றிலைச் சாறை விழுங்கிய அவள், கொளுத்திப்போட்ட சரவெடிபோல் படபடவெனெப் பேசினாள்.
ஏம்ப்பா .. நீ மெத்தப் படிச்சவன் .. பாக்க வேற ஹீரோ மாதிரி இருக்கே. கை நிறைய சம்பாதிக்கற நீ அவளைக் கண்கலங்க வெக்கமாட்டே ன்னு நினச்செதெல்லாம் பாழாப்போச்சே. நிரந்தரமா வெச்சுக்கறேன்னு சொன்னயே ஐயா அன்னிக்கி. தனியா இருக்கிறவன் வீட்டுக்கு வயசு வந்த பொண்ன அனுப்பாதே ன்னு தடுத்த என் புருஷன் சொல்ல மீறி நான் ஒன்வீட்டுக்கு ஏன் அனுப்பினேன்னா, பக்கத்திலெ பலரிடம் உன்னப்பத்தி கேட்டதுக்கு நீ ரொம்ப நல்லவன் ன்னு சொன்னதனாலத் தான்.
வயசுக்கு வந்து பள்ளிக்கூடம் போயி படிக்கற என் பதினாறு வயசுப் பெண்ன, நீ நன்னா பொறுப்போடு பாத்துப்பே ன்னு நினைச்சுத் தான் ஐயா அனுப்பிச்சேன். கழிஞ்ச ஒரு மாசம் காலைல வா-ன்னா காலைல வந்திச்சு.சாயந்தரம் வா-ன்னா சாயந்தரம் வந்திச்சு. ஒரு மாசம் ஒன்ஜோலி ஆனப்பறம் இனிமே நீ வரவேண்டாம் ன்னு சொல்லிட்டியே. நீ கொடுக்கிற பணத்திலே நிறைய பொஸ்தகம் வாங்கிப் படிச்சு பாசாகி நல்ல வேலைக்குப் போயி குப்பத்திலே குடிசையிலே வாழும் எங்களை வாழ வைக்க நினெச்ச அந்த சின்னஞ்சிறுச இன்னமே வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்ல உனக்கு எப்படியப்பா மனசு வந்திச்சு.
மூச்சு விடாமல் தொடர்ந்து பேசிய அவளிடம்,
நீ சொன்னதெல்லாம் சரிதான். இல்லைங்கல்ல. ஒன் பொண்ணு வேறு ஏதாவது உன்கிட்ட சொல்லிச்சா ன்னு கேட்டான் அவன்.
அதற்கு அவள் இல்லீங்கையா என்றாள்.
சரி .. இப்போ நான் சொல்லறத கொஞ்சம் காது கொடுத்துக் கேக்கிறயா என்று சொல்லி, ப்ரியா ரொம்ப நல்ல பொண்ணு. எல்லா வேலையும் ரொம்பவே சுத்தமா, அழகா செய்யறா. படிப்பில கூட அவள் ரொம்ப கெட்டிக்காரின்னு எனக்குத் தெரியும். இன்னும் ஒரு வாரத்திற்குள் நான் அமெரிக்கா போயாகவேண்டும். என் அலுவலகத்திலிருந்து அங்கு செல்வதற்கு சொல்லிவிட்டார்கள். இந்த விபரத்தை அவளிடம் சொல்லி, அவள் படிப்பதற்குரிய பணத்தை அவள் பெயரில் ஒரு வங்கிக்கணக்குத் தொடங்கி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை டெபாசிட் செய்து விடுவதாக சொன்னேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள். ஏன் என்று கேட்டதற்கு, வேலை ஒன்றும் செய்யாமல் பணம் பெற்றுக்கொள்வது அடிமைத்தனம் என்று சொல்லிச் சென்றுவிட்டாள். குப்பத்தில் பிறந்திருந்தாலும் அவளொரு கோமேதகம் ஆவாள்.
நீ வங்கியில் கணக்கு வைத்திருந்தால், அதன் விபரங்களை எனக்குக் கொடு .. உன் மகளின் படிப்பிற்குரிய செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன். அவளை நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள் என்றதும், ப்ரியாவின் தாய் ஐயா நீ தெய்வம் என்று அவன் கால்களைத் தொடும்முன் அவளைத் தடுத்து நிறுத்தினான்.