நிம்மதியுறக்கம்
ஆளரவமற்ற அடர்ந்த கானகத்தினூடே
தனித்த இரவுப்பொழுதில்
பாதம் பதித்த பயணத்தின் இடைவழியில்
மூச்சிறைக்க முனகிய ஓசை கேட்டு
விடுப்பதா, அடுப்பதாவென்று அறியாமல்
நடவா கால்களின் நங்கூரத்தை
செவியில் விழுந்த வலியின் உளிகொண்டு சிதைத்து
பாதையற்ற சிறுவெளியில்
தவழ்ந்தும், உருண்டும் சென்று
நேற்றிரவு நான் தொலைத்த
நிம்மதியுறக்கத்தின் நீண்ட பகுதியைக் கண்டேன்.
தவிப்புடன் தொட்டுத் தூக்க முனைந்ததில்
தொலைந்தது எந்தன் இன்றைய உறக்கத்தின் மிகுதியும்..!