கரைந்துவிடாதென் பனித்துளிகள்
நீ தான் சரியென்றும்
தவறுகள் என்னில்
இல்லையென்றும் போராடி
உடைந்தழுத நிமிடங்களின்
முடிவில் தவறிழைத்தது
சொற்களாகவே இருக்கட்டும்,
நாம் அல்லவே
சிறகொடித்துக் கூடுகட்டும்
தாய்ப் பறவையென
நான் நிற்கிறேன்
அன்பின் பிடியில்
உதிர்ந்து விழுந்த
இலைகளின் நரம்புகளில்
பட்டுத் தெறிக்கின்றன
கண்ணீராய்க் காதல் துளிகள்
என் நொடிகள்தோறும்
உன் கிறுக்கல்களே
முற்றுப்பெறா ஓர் ஓவியமாய்
தூரப் பறவை
சிறகசைத்தால் உன்
வருகையோயெனப்
பறக்கிறது மனது
என்ன சொல்லித்
தேற்றுவது எனை
உன்னைத் தவிர !!