வேகம் எதற்கு
எதற்கு இத்தனை வேகம் மனிதா
எங்கே போகிறாய்?-நீ
எதனைத்தேடி எதற்காய் விரைந்து
எங்கே போகிறாய்?
தொலைத்துவிட்ட கடந்த நொடி நாம்
தேடினால் கிடைக்காது! -அட
நிலையில்லாமல் கழித்த மணித்துளி
நமக்கு மீளாது!
விலையில்லாத மணியின் பொழுதுகள்
விளைந்து வாராது.!
களைந்து போன நீரின் எழுத்துகள்
காணக் கிடைக்காது..
என்ன கொடுமை மனிதா உன்செயல்
எத்தகு கொடியது தெரியுமா?
எதற்கு இத்தனை வேகம் உன்னை
இழக்கவா இந்த வேகம்?
வேகம் மீது தாகம் கொண்டால்
விவேகம் மறந்து போகும்
தேகம் அழிந்து போகும்-நீ
தேடும் நிலையோ சோகம்..
நிதானமாகக் கடக்கும் வாழ்வை
வேகமாக அழிக்கின்றாய்! -அட
நிம்மதியான நேச உறவுகள்
நிற்கதியடைய வைக்கின்றாய்!
குடும்பம் மனைவி மக்கள் என்றொரு
கூட்டம் இருப்பதை மறக்கிறாய்
விடுதலை கண்டு உயிரெனும் பறவை
உடலைத் துறக்கப் பார்க்கிறாய்!
அடடா!உந்தன் ஆருயிர் தன்னை
அற்பமாகவே நினைக்கின்றாய்-அதை
வாகனம் என்ற வடிவில் ஏறி
வேகத்தாலே முடிக்கின்றாய்!
எத்தனை அரிய வாழ்வு-அந்த
இறைவன் கொடுத்தது-அதை
நித்தமும் ரசித்தே அனுபவிக்காமல்
நீயா கெடுப்பது?
எத்தனை தொலைவு செல்ல வேண்டுமோ
அதனைக் கணக்கிடுவாய்!-அதை
திட்டமிட்டடைய குறித்த நேரத்தின்
முன்பே தொடங்கிடுவாய்!
மிதமென வேகம் கவனமாய்ப் பயணம்
மீதமாக்கும் நேரத்தை-நீ
நித்தமதைத் தொடர்ந்திடு
வேகம் மறந்திடு-அது நீட்டும் ஆயுள் காலத்தை..