எங்கே என் கிராமம்

எங்கள் ஊர் பொள்ளாச்சி பக்கம் உள்ள சிறு கிராமம். கிராமத்திற்கான அத்தனை பொருத்தமும் அம்சமாய் பொருந்தியிருந்தது ஒரு 15 வருடங்களுக்கு முன். நான் படித்த பள்ளி ஜமின் ஊத்துக்குளியில் , அப்பொழுது அரசு உயர்நிலை பள்ளியாக இருந்தது.
நான் தினமும் 2 மைல் நடந்தே சென்று படித்து வந்தேன். நடக்கும் அலுப்பே தெரியாது. நடந்து செல்லும் வழியெல்லாம் நெல் வயல்கள். நடந்து செல்வதே நெல் வயலின் இடையில் இருக்கும் வரப்பு வழியில்தான்.
வயலுக்குள் மீன்கள் துள்ளும். வரப்பில் நடக்கும் போது பயந்து தான் கால் வைப்பேன். பொந்துக்குள் நண்டுகள் படுத்திருக்கும்.
வயலுக்குள் எப்படி மீன்கள் என்று நினைக்கிறீர்களா? தோட்டத்து கிணறுகள் நிரம்பினால் கடை வாய்க்காலில் தண்ணீர் வழிந்து செல்லும். இப்படியே ஒவ்வொருவர் தோட்டத்து அதிகப்படியான நீரூம் வாய்கால் வழியோடி நெல் வயல்களை நிறைத்து பின் ஆற்றை நோக்கி ஓடும். கிணத்து மீன்கள் வயலில் விளையாடி பின் நதி தேடி கலக்கும். ஆற்று மீன்களை நலம் விசாரித்து வயல் வெளிக்கே அழைத்து வரும்.
காய்கறிகள் நாங்கள் கடையில் வாங்கியதே இல்லை. கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், பீர்கங்காய், பூசணி, மிளகாய், முருங்கைக்காய் என்று எல்லாமே தோட்டத்திலேயே விளையும். கீரைகள் வகை வகையாய் பயிர்களுக்கு இடையில் முளைத்திருக்கும். காசு கொடுத்து வாங்கியதில்லை.
பொங்கல் வந்தாலே சந்தோசம் தான். மாடுகளுக்கும் கூட. எங்களுக்கும் தான். மாடுகளுக்கு குளிப்பாட்டி கொம்புகளுக்கு வண்ணம் பூசி, மாலைகள் போட்டு, அடடா அதை பார்ப்பதே சந்தோசம் தான்.
பிறகு பொங்கல் வைக்க தோட்டங்களுக்கு மாட்டு வண்டியில் செல்வது அதை விட மகிழ்ச்சி. எருதுகளின் கழுத்து மணியோசை. அழகிய இசை.
இப்பொழுது எங்கே போனது எல்லாம். வயல்கள் எல்லாம் வீட்டு மனைகளாய். காய்கறிகள் விளைந்த நிலங்கள் எல்லாம் கான்கிரிட் கூடுகளாய். மழை பொய்த்தது, கல்வி கற்ற நம் மக்கள் காட்டில் வேலை செய்ய , விவசாயம் பார்க்க கஷ்டபடுவதும்தான். இப்பொழுதே இந்த காய்கள், நெல் எல்லாம் நம்ம ஊரிலேயே விளஞ்சுது தெரியுமா என்று நம் குழந்தைகளுக்கு கூறும் நிலைமை. இப்படியே போனால் நாம் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது என்றே தெரியாமல் போய்விடும். அதன் பிறகு உணவுக்கு பதிலாக அனைவருக்கும் பசிக்காத மாத்திரை விற்கப்படும்.
அப்போது சொல்வார்கள், முன்னெல்லாம் பசித்தால் சாதம், பருப்பு, காய்கள் எல்லாம் சாப்பிடுவார்களாம். அதெல்லாம் அந்த காலத்துல எப்படிதான் சாப்பிட்டாங்களோ என்று பேசிக்கொள்வார்கள்,.