அல்வா தின்க ஆசை

அல்வா தின்க ஆசை ..

வெகு நாட்கள் ஆகி விட்டது. அவனுக்கு அல்வா தின்க ஆசை வந்து விட்டது. நடந்தான்.

லாலா கடை வந்தது. சுடச்சுட அல்வா தட்டு நிறைய கிண்டி வைத்திருந்தார் கடைக்காரர்.

வாங்க சார் .. வாங்க .. ரொம்ப நாளாச்சு. நம்ம கடைப்பக்கம் வரதே இல்லையே. உங்களுக்கும் சர்க்கரை வியாதியா என்று லாலா கேட்டார்.

அப்படி ஒன்றும் இல்லை லாலாஜி. சுடச்சுட அல்வா தின்க ஆசை இன்று வந்தது. அதனால் உங்கள் கடைப்பக்கம் வந்தேன். ஒரு பிளாடேல நூறு கிராம் அல்வா கொடுங்கள் என்றான்.

கடைக்காரர் வட்டத்தட்டில் சிறிய வாழையிலை வைத்து அதில் நூறு கிராம் அல்வா எடுத்து வைத்து நீட்டினார். பிறகு பிரௌன் நிறத்தில் இரண்டு முந்திரிப் பருப்புகளையும் எடுத்துக் கொடுத்தார்.

ஆவி பறந்தது அல்வாவில் இருந்து. கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்து ரசித்து உண்டான். என்னவோ தெரியவில்லை .. அந்த லாலாக் கடை அல்வாவில் அவ்வளவு சுவை. இறுதியாக அவர் கொடுத்த இரண்டு முந்திரிகளையும் நன்றாகச் சுவைத்து உண்டான் அவன்.

அல்வா தின்றபின் கடைக்காரர் கொஞ்சம் மிக்சரை எடுத்து கொடுத்தார். மிக்சர் வேண்டாம் என்றான். இனிப்புத் தின்றபின் கொஞ்சம் காரம் எல்லோரும் சாப்பிடுவார்கள். நீங்கள் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என்று கடைக்காரர் கேட்க, அவன், எல்லோருக்கும் மிக்சர் தானே கொடுக்கிறீர்கள். எனக்கு ஓமப்பொடி வேண்டும் என்றான்.

ஓ .. அதனால் என்ன .. என்று சொல்லி, ஓமப்பொடி இருந்த டப்பாவைத் திறந்து, ஒரு கரண்டியை அதிலிட்டு கொஞ்சம் கொடுத்தார். வலது கை குழியில் அதைபெற்றுக் கொண்டு அதையும் சுவைதான் அவன்.

உண்டபின், நூறு கிராம் வீதம் இரண்டு அல்வா பொட்டலம் கட்டச் சொல்லி. அதைப் பெற்றுக்கொண்டதும், சுவைப்பதற்கு மிக்சர் தரவா இல்லை ஓமப்பொடியா என்று கேட்டார்.

கொஞ்சம் காராசேவு வேறு ஒரு பொட்டலம் போட்டுத் தாருங்களேன் என்றான். ஓ .. அதனால் என்ன .. காராசேவே தருகிறேன் என்று சொல்லி காகிதத்தில் ஒரு பொட்டலம் செய்து அதில் காராசேவும் தந்தார்.

வழியில் பூக்கடையில் இருந்து மூன்று முழம் மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டு வீடு நோக்கி நடந்தான்.

அவன் மனத்திரையில் .. மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ .. இனிக்கும் இன்ப இரவே நீ வா வா .. என்ற அந்தப் பழைய பாடல் ஒலித்தது.

எழுதியவர் : (26-Jul-14, 1:57 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 197

மேலே