அன்புள்ள அப்பா அமரர் சுசிலாமணி நினைவு போட்டி
(அமரர் சுசிலாமணி நினைவு போட்டி )
உன் விரலுக்குள் என் வாழ்வு
எனது நடைவண்டி நீ
கரிசன களிம்புக்காரன் .... நீ
தண்டித்ததும் கண்டித்ததும் எனக்காய் !
உன் உள்ளத்தில் என் நினைவு
எனது சுமைதாங்கி நீ
அன்பில் தாயுமானவன் ....நீ
சுகங்களும் துக்கங்களும் எனக்காய் !
உன் கண்ணுக்குள் என் பிம்பம்
எனது கலங்கரைவிளக்கம் நீ
உயிரின் ஜீவஜோதி ....நீ
காட்சியும் கோலமும் எனக்காய் !
உன் நித்திரைக்குள் என் கனவு
எனது ஏகாந்தஉலகம் நீ
பண்பில் சிறந்தபிதா ....நீ
ஓட்டமும் நாட்டமும் எனக்காய் !
உன் மூச்சுக்குள் என் பேச்சு
எனது உயிர்வளி நீ
படைத்த பிரமன் ....நீ
வசிப்பதும் சுவாசிப்பதும் எனக்காய் !
உன் இதயத்துள் என் துடிப்பு
எனது துக்கநிவாரணன் நீ
பொறுப்பான பாதுகாவலன் .... நீ
அடிப்பதும் அரவணைப்பதும் எனக்காய் !
உன் குரலுக்குள் என் வடிவம்
எனது சப்தஸ்வரமும் நீ
இசைக்கும் வானம்பாடி ....நீ
தேடியதும் பாடியதும் எனக்காய் !
உன் உயிருக்குள் என் உறவு
இனி எப்பிறவியிலுமில்லை நம் பிரிவு !