ஒரு பயணம் சில ஏற்பாடுகள்
அழகான என் கண்ணீரே
விழிகளில் ததும்பி
கன்னப் பரப்பிலே
கால் பரவு!
என் எண்ணச் சிறகே
மன வெளியின் இரவு பகல்களை
ஒரு முறை
விரைந்து சுற்றி வா!
என் நந்தவனமே
எல்லா செடிகளிலும்
பூக்களை
புஷ்பித்துக் காட்டு!
எனது ஞாபகமே
உன்னில் விழுந்த
எல்லா உறவுகளையும்
உணர்ச்சிகளையும்
பறித்துக் கொடு!
என் தரையில் இறங்கிய
தேவதைகளே
சொர்க்க மகரந்த
பூத்தூவுங்கள்!
என் கன்றுகுட்டி பருவத்தின்
துள்ளலே வா!
என் காளைப் பருவத்தின்
காதலே வா!
நான் தொலையவிட்ட
வசந்தங்களே வா!
என்னை வாழ்ந்த
வாழ்க்கையே வா!
எல்லாம்
இன்னும் சில நிமிடங்களுக்குத்தான்....!
மண்ணில் நிகழ்ந்த ஒரு
மனித காவியத்திற்கு
மயான மேடையில் இன்று
பரிசளிப்பு விழா
சந்தங்களின் இடைவெளியில் உறங்கும்
மௌனங்களுக்குள் வசித்தவனுக்கு
சொந்தங்கள் புரியும்
வழியனுப்பு விழா
அங்கே.....
இதயங்களிலே
புதையல் எடுத்தவனுக்கு
இரக்கமற்ற பிள்ளையொருவன்
கொள்ளி வைக்கப் போகிறான்! (1995)
('தரையில் இறங்கும் தேவதைகள்' நூலின் இறுதி கவிதை)