என்றும் மாணவன்

நேற்று செய்ததை இன்றும் செய்தோமா
மீண்டும் நாளை இதையே செய்வோமா
மாற்றம் இல்லா வாழ்வை மாற்ற
மானிடர் நாம் முயற்சி செய்வோமா

கற்றவை எல்லாம் கடுகு அளவு
கற்க வேண்டியவை உலகு அளவு
கற்பது நின்றால் உயர்வு இல்லை
நிற்பதர்க்கும் நித்தம் ஓடுதல் வேண்டும்

மாற்று சிந்தனை மனதில் வேண்டும்
வேற்றுமொழி கற்க விழைந்திட வேண்டும்
விஞ்ஞானத்தின் வினைகள் ஏற்று நாம்
மெய் ஞானத்திலும் மூழ்கிடல் வேண்டும்

இசையில் ஆர்வம் வளர்த்திட வேண்டும்
இயல்பாய் கலைகளை ரசித்திட வேண்டும்
மனதை இலேசாய் வைத்திடவே நாம்
மறதியை போற்றி மகிழ்ந்திட வேண்டும்

நீயென் செய்தாய் என்பதை விடுத்து
நாம் செய்வன நன்கே செய்வோம்
இவற்றால் இவை இயலா தென்றில்லாமல்
எவற்றால் இயலுமென கண்டே செய்வோம்

கற்பதற்கு ஏற்ற காலம் தேடாமல்
விழித்த நேரம் சரியென்று உணர்வோம்
மனவள கல்வி மேன்மைகள் அறிந்து
தினம் ஒரு பாடம் படித்தல் நன்று!

எழுதியவர் : முரளி (22-Aug-14, 7:17 pm)
Tanglish : endrum maanavan
பார்வை : 98

மேலே