இனி கிடைக்காத அந்த நாட்கள்

தாழம்பூ வாசல் வீடுகள்
மாம்பலகை நிலக் கதவுகள்
ஓட்டு வீட்டின் திண்ணைகள்
நம் ஊரின் காலக் கோடுகள்...!

150 ரூபாய் கல்யாணப்பட்டுகளும்
மணமகளை மின்னிட செய்தது
50 ரூபாய் பட்டு வேஷ்டிகளும் கூட
மண மகனை அலங்கரித்தது

அன்று அமைத்த வீடுகள்
அலமாரிகளும் தூண்களோடு
இன்று நாம் வாழும்
சிங்காசன சிற்பங்கள்....

வட்டுகள் உருட்டி பயணித்தோம்
வரிசையில் உணவுகள் உண்டோம்
தாய் தந்தைகளின் வியர்வை
உரங்களாய் நம்மூர் வயல்வெளிகளில்.....

ராமராஜன் படத்திற்கு ஏங்கினோம்
ராஜேந்தர் பாட்டினை தேடினோம்
பேபிஷாலினி சிரிப்பினில் மயங்கினோம்
டிவி டெக் வாடகையில்...

எல்லோர்க்கும் அவரவர்
தழும்புகள் நினைவுபடுத்துகிறது
நம் சிறுவயதில் விழுந்தது
காயப்பட்டது காபிபொடி வைத்தது

பள்ளியோடு சிலர் பிரிந்தோம்
கல்லூரியோடு கனவுகள் தொடர்ந்தோம்
நம் நட்பு பயணத்தில்
இன்றும் அவ்வப்போது தேடுகிறோம்

ஊருக்கு போகும்போது எல்லாம்
நாலாப்புறமும் இரசித்து மகிழ்கிறோம்
முழுவதுமாய் நண்பனிடத்தில் நலங்கூட
விசாரிக்க முடியாமல் வருந்துகிறோம்

ஊர் தெருக்களில் நடந்தது
வயல் வெளிகளில் அமர்ந்தது
கூட்டமாய் கூடி பேசியது
கண் கலங்க வைக்கிறது
நம் சிறுவயது ஞாபகங்கள்....

காட்டின் கள்ளி செடியில்
யாருக்கும் தெரியாமல் எழுதிய
நம் பெயர்கள் நினைவுகளாய்
இப்போது பார்க்க முடிவதில்லை

இனி கிடைக்காத அந்த
நாட்களை நினைத்துதான்
இனிதே நகர்கிறது நம்
இன்றய நகரத்தின் நாட்கள்!...

எழுதியவர் : பிரியா பாரதி - தூத்துக்குட (27-Aug-14, 2:26 pm)
பார்வை : 122

மேலே