எரிமலையில் தவிக்கும் அன்பு -சந்தோஷ்
வெடித்துச்சிதறும் எரிமலை
கொதித்து எழும் சீற்றம்
வெகுதொலைவில் அது காட்சி
மிக அருகில் அது மிரட்சி
விரைந்து வீழத்துடிக்கும் இதயம்
விரைந்தால், அன்பு வரைந்தால்
அனலில் பொசுங்கும் அபாயம்
வெகுதொலைவிலிருந்து
அத்தீப்பிழம்பை
அண்ணாமலை தீபமென்று
பரவசத்தில் உறவாடி கொள்ளலாம்.
கர்வத்தில் திளைத்திடும்
அவளும் ஒரு எரிமலைதான்
என்றே சரியாக
கணித்திட இயலாத
ஒரு வெகுளியானமழலை,
அவள் அன்புகடல்
என்றொரு மாயை நம்பிக்கையில்
பாசப்படகை செலுத்திட துடித்தது
அவள் அன்புக்கடலின் ஆழத்தில்
பாசமுத்தெடுக்க நினைத்தது
பாவம்...!
அந்தோ பரிதாபம்...!
அவ்வப்போது
காரணமின்றி வெடிக்கும்
அந்த எரிமலைக்காரியின்
புறக்கணிப்பு அனலில்
சுட்டெறிந்த வேகத்தில்
சட்டென்று உணர்ந்து
அழுதிட கூட தெரியவில்லை
அந்தமழலைக்கு..!
அவள் பெயரால்
உறைந்துகிடக்கும்
இதயத்தில்
தாய்மையான அன்பிற்கு
ஏங்கி தவிக்கும்
மழலைக்கு எப்படியடா
உணரமுடியும்
சுயநலத்தினால் புறக்கணித்த
புறக்கணிப்பு வலிதனை..!
-இரா.சந்தோஷ் குமார்