கல்லூரி படிமங்கள்
நடத்துனரிடம் கடத்தும்
பெண்களின் பேருந்து அட்டையில்
பெயர்தேடிய கணங்கள்
கமலா ? ரஜினியா ?
மைதானத்தில் கட்டிப்புரண்ட
கை கலப்புகள்
பல புத்தகங்கள் இருப்பினும்
எழுதிய ஒரே நோட்டு
ஆறுபேர் குடித்து
அனைவரும் உளறிய
ஒற்றை பியர் பாட்டில்
ஆட்டம் புரியாதவரும்
ஆடுவதை பார்ககவைத்த
ஸ்டெஃபி,சபாட்டினி
கல்கி,ஜெயகாந்தன்
படிக்காமலே புளுகிய
அவர் புகழான நாவல்கள்
தேவியில் பைலட்டில்
துளிகூடப் புரியாமல்
அலசிய ஆங்கிலப் படங்கள் ...
திங்களன்று பரிட்சைக்கு
ஞாயிறன்று தேடிய
பயிலாத பாடக் குறிப்புகள்
எதிர்பார்ப்பு ஏதுமில்லா
எப்போதும் சுற்றிவரும்
தோள் கொடுத்த தோழமைகள்
இப்போதும் ஞாபகத்தில்
எல்லாமே நினைவுகளில்
நினைவு மறந்த வேளைகளில்
நிகழ்கால வேலைகளில்...
எங்கிருந்தோ ஒரு பாட்டு
எல்லாவற்றையும் கிளறிவிடும்.
நான்கு நிமிடப் பாடலொன்றில்
மூன்று வருடம் வாழ்ந்துவிடுவேன்.!!