எட்டாம் கிரகமும் ஆணடிமைத்தனமும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஏழு தவிர்த்து
எட்டாவதாக ஏதேனும்
கிரகமிருந்தால்
கடவுளே... கவனித்துக்கொள் ..
இது என்
விண்ணப்பம்....!!
சூரிய ஒளி
சுகப்பட்டதாய் இருக்கட்டும்..
மனிதர்களில் முதலாய்
நீ படைப்பது
பெண்ணாகக் கடவது...
அவள் உதிர்த்த
கூந்தலிலோ
உடைந்த நகத்திலிருந்தோ
உயிர் பெறுபவனாகட்டும்
ஆண்....
உயிர் செய்யும் அணுக்கள்
உற்பத்தியாக்கட்டும்
பெண்...!
யோனித் திரவங்கள்
குடித்து
கருத்தரிப்பவனாகட்டும்
ஆண்...!!
தலையென்பது
சிரசாக பண்படட்டும்...
அங்கு தட்டைமார்பளவு
தலையென மொழியட்டும்...
தலையழகு புகழட்டும்
மரபுக்கவிதை...
தடாகங்களாய்
மாற்றிப் புனையட்டும்
புதுக்கவிதை....!!
போர் புரிவது
அரசிகளாகட்டும்... தோற்ற
அரசி புருஷர்கள்
அடிமைகளாகட்டும்...!!
வேசன் வீதிகளில்
அபச்சாரம் செய்து
வீராங்கனைகளுக்கு
இரையாகட்டும்...!!
மழைக்காலப் பின்னிரவொன்றில்
தாதக் கிழவன்
சலித்துச் சொல்லியிருக்கட்டும்
"இதுவும் ஆண் புள்ளைதானப்பா"
ஏனைய கிழவன்கள்
ஓடியிருக்கட்டும்
எருக்கம்பால் பிடிக்க....!!
ஆண்களின்
விந்துபீய்ச்சிய தினங்கள்
அவர்களின்
விலக்கு தினங்களாகட்டும்..
கோவிலுக்குள்
அனுமதி மறுக்கப்படட்டும்....!!
அரும்புமீசை அரும்பிய
ஒரு
குரலுடைவு தினத்தில்
பச்சை கட்டிவிட்டுப்
போயிருக்கட்டும்... தந்தை மாமியின்
சீர்வரிசைகள்....!!
சேலை கட்டிய
பெண்களும் .. கச்சை
கட்டிய ஆண்களுமாகட்டும்
திரைப்படக் காதல்களில்..
மீசையின் அடர்த்தியும்
மார்பின்
தட்டையளவுமாகிப்
போயிருக்கட்டும்
கவர்ச்சி எனப்படுவது....!!
இரவுகளில்
தந்தை தனித்திருந்து
படபடத்திருக்கட்டும்
மகனின் ஒற்றைப் பயணநிலை
நினைத்து....!!
ஆணடிமை பற்றிப்
பொங்கட்டும்...ஒரு கவிதை..
ஆண்களின் தந்தைமை
குறித்துப் போற்றட்டும்
மறு கவிதை...!!
இவ்வாறான இரண்டாம்
உலகம் படை...!!
இவ்வுலக
ஆண்களெடுத்துப் போய்
அங்கு விதை....!!!