காட்டுக் குதிரையில் ஏறிப் பறக்கவோ
படிமங்கள் எனக்குப்
புரிவதே இல்லை!
படிகளில் ஏறிப்
பழக்கப் பட்டவன்!
வானவில் ஏறி
வைகுண்டம் போவதா?
நடைகளைப் பார்த்தே
நாவை அசைத்தவன்!
தொடைகளைப் பார்த்தே
துண்டை இறக்கவா?
படிமங்கள் எனக்குப்
புரிவதே இல்லை!
கேள்வியைப் பார்த்துப்
பதில்களை எழுதியோன்!
பதில்களை வைத்துப்
பல்லாங்குழி ஆடவோ?
அலைகளைப் பார்த்துச்
சமுத்திரம் இரசித்தவன்!
ஆழத்தில் சென்று
முத்துக்கள் எடுக்கவோ?
படிமங்கள் எனக்குப்
புரிவதே இல்லை!
நிலவினைக் காட்டச்
சோறு உண்டவன்!
உலவிட நினைத்தே
உயரே தாவவோ?
கடிவாளம் இட்டக்
குதிரைக்குப் பயந்தவன்!
காட்டுக் குதிரையில்
ஏறிப் பறக்கவோ?
மண்ணால் எழுந்த
சிற்பம் போன்றவன்!
மலையாய் நினைத்து
மக்களை மிரட்டவோ?
படிமங்கள் எனக்குப்
புரிவதே இல்லை!