வருணனைகளின் பொருள் என்னவோ

வருணனைகளின் பொருள் என்னவோ

மீன் விழிகளாம்
வெண்டைக்காய் விரல்களாம்
தேன்சுரக்கும் இதழ்களாம்
பால் போன்ற மேனியாம்
அடடா...இப்போதே ருசித்துவிட்டு
எச்சிலென துப்பிவிட எண்ணமோ

இதமான காற்றாம்
சந்தனமாய் மணமாம்
மயில்தோகையாய் மென்மையாம்
என்ன...இப்போதே உரசிவிட்டு
ச்சீ.. என்று ஒதிக்கிவிட திண்ணமோ

பட்டாம்பூச்சி என்கிறீர்கள்
உயர பறக்க நினைக்கும் எனது
சிறகுகளை உடைத்து
பூ படுக்கையை நோக்கி
துரத்திவிட நினைக்கிறீர்களா

நிலவு என்கிறீர்கள்
இருளிற்கும் வெளிச்சம் தர நினைத்த
என்னை மேகங்களால் மூடி அணைத்து
விடியும்வரை மட்டுமே உனது
வேலை என்கிறீர்களா

மின்மினி என்கிறீர்கள்
இரவில் மட்டுமே
என்னை காண நினைக்கிறீர்களா

அப்படி என்னதான் சொல்லிவிட நினைக்கிறது
இந்த சமூகம் எனக்கு
ஏன் இந்த வருணனைகள்
நான் பெண் என்று எதற்காக..???

எழுதியவர் : மணிமேகலை (22-Sep-14, 9:46 pm)
பார்வை : 181

மேலே