இரவு
குளிர்ந்திருப்பதையும் மீறி
மென்மையான இந்த வெப்பம்
பிடித்திருக்கிறது…
எதையோ பிரவகிக்கத் துடிக்கும்
இந்த அடர்ந்த இருட்டு
விரல்களுக்கு
கண்கள் முளைக்க வைக்கின்றன…!
ஒவ்வொரு விரல்களிலும்
பிரசவ வலியில் சொற்கள்.
எந்த வலியும்
ஓசையற்ற விசும்பலும்
மனதிற்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
வெளிச்சத்தில்
நசித்துபோய் விடுவதில்
என் இரவிற்கு மகிழ்ச்சி.
ஆனபோதிலும் விரல்களுக்கு
உறங்கு என்று
ஆணையிடும் விலங்குகளால்
நடுநிசிவரையில்
நெடுநேரமாய்
காத்திருந்த சொற்களை
இரக்கமில்லாமல்
கொன்றுப் போட நேர்ந்தது.
மின்விளக்கைப் போன்று ஒளிரும்
தன்மையை
திறக்கும் வேளையில்
என்னிருவிழிகள் கொண்டிருந்தால்
நினைத்த நொடியில்
அந்த சொற்களுக்கு
உயிர் தந்திருக்க முடியும்.
-மீராவாணி
-