குளத்து மீனு கண்ணுக்காரி
கத்திரிக்கா பல்லழகி
கத்திரிக்கோல் சொல்லழகி,
மந்திரியா ஆனாலும்
மந்திரிக்கும் கள்ளழகி .....
கன்னக் குழியழகி
காட்டாத்து விழியழகி,
நெத்தி தொடும் கூந்தலிலே
புத்தி மாத்தும் பேரழகி......
புருவம் ரெண்டும்
வில்லாகும்
கர்வம் ரெண்டும்
கல்லாகும்
சிணுங்கி நின்னு
அவ பார்த்தா
சித்திரமும் கள் ஆகும்....
மந்தாரப் பூந்தோட்டம்
மாதிரியா அவ நோட்டம்,
விரல் தீண்டும் வேளையிலே-அவ
மருதாணி நிறமாட்டம்....
கதை பேசி கண் கூசும்
புதுக் கவிதை தாள் போல...
எதையாது அவ பேச
அதுதான் கவிதைங்கும் -என்
கதவுத் தாழ் கூட......
ஆளுக் கொரு வாய் தின்னும்
அரிசிச் சோறில் அவ வாசம்,
அத்து மீறி கிட்டப் போனா,
அரிசிப் பருக்கை வாய் பேசும்.....
கை பிடிச்சு, கால் பிடிச்சு
பகல் உழைப்பை மறக்கச் செய்வா....
நண்டூரி, நரியூரி, விரல் ஊரும் வேர்வைக்குள்ள
சந்நியாசம் துறக்கச் செய்வா.......
குளத்து மீனுக் கண்ணுக்காரி
கொக்கைத் தின்னும் கருணைக்காரி,
கதவடைச்ச மறுநிமிஷம்
மீசை முறுக்கும் பெண்மைக்காரி,........
கவிஜி