கவலை விடுக்க

கவலை என்பது..

இச்சையின் குறைப்பிரசவம்.
அவநம்பிக்கையின் உடன்பிறப்பு.
முயற்சியின் குறைபாடு.
அயற்சியின் வெளிப்பாடு.

சஞ்சலத்தின் இணை.
சந்தேகத்தின் துணை.
அகமரிக்கும் கரையான்.
அகவேர் தறிக்கும் எலி.

நம்பிக்கைத்துளிர் தின்று
நாளும் வளரும் புழு.
நலங்கெடுக்கும் நஞ்சு.
பயமுறுத்தும் பூதம்.

கவலைவாழ் மனதில்
களிப்புக்கிடமில்லை.
கழியும் பொழுதெல்லாம்
கசியும் வேதனையில்.

கொள்ளுமிச்சையினில்
குறைநிறையுணர்ந்து - பின்
கூடுஞ்செயலுக்காய்
குறைவறத் திட்டமிட்டு

வேண்டும் உதவிகளை
விநயமாய் பெற்று - மேலும்
விருப்புக்குன்றாமல்
வேண்டுங்காலமட்டும்

முனைப்புடன் முயற்சிசெய
முனையும் பலன் கிட்டும்.

இடையிடையே எதிர்கொளும்
தடைகண்டு துவளாதீர்.
தடைவருமோ எனவெண்ணித்
தானே தவிக்காதீர்.

காத்திருக்க நேரிடில்
கவலை கொள்ளாதீர்.
கவலைக்குணவாகி
காலமெலாம் சலிக்காதீர்.

கவலைப்படும் மனதில்
தெளிவும் திடமுமில்லை.
திறங்குறைந்த மனதுடனே
செயல்தொடரல் நியாயமில்லை.

கவலை தோன்றுங்கால்
கவலைக்கண் ஆராய்ந்து
எதனால் வந்ததென
பதற்றமின்றி பகுத்துணர்ந்து

தேவையான தீர்வுகண்டு
தேர்ந்து செயல்விளைக்க
தொலையும் கவலையெலாம்
தொடரும் நல்வாழ்வு.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (28-Sep-14, 1:52 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 73

மேலே