இரவு காத்தவள்
இரவு காத்தவள்
================
வீதி விளக்கில்லா குண்டும் குழியுமான
அந்த பாதையோர சாக்கடையிலோ
ஊர்ப்பொது திடலில் உறங்கும்
கச்சாஎண்ணெய் வாசம் நிறைந்த
அந்த அரசு காலிப்பேருந்திலோ தெரியாது
எந்த சீட்டாட்டப் பந்தலிலோ
ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும்
எந்த சாராயக் குடிலிலோ
அப்பள்ளிப் பரம்பின் அடுத்துள்ள
தாசிகளின் குடியிருப்பில்
மஞ்சம் கொண்டுவிட்ட
பரத்தை லோலனாகவோ தெரியாது
மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம்
பாதசாரிகளின் பாதைகளை
இடைமரித்தப்படி குடியிருக்கும்
பிச்சைக்காரர்களின்
படுக்கையின் மத்தியிலோ
அத்தேயிலைத்தோட்டத்தின்
ஆளரவத்தைக் கடந்து
பின் தோன்றும் ஊசியிலைக்காட்டின்
அடிவாரத்தில்
புகைந்துகொண்டிருக்கும்
கற்பூரத்தைலக் கூடாரத்திலோ தெரியாது
சுடுகாட்டிற்கு போகின்ற வழியில்
குமுகாயக் கூடத்தை தொட்டடுத்த
காலி மைதானமொன்றில்
நெருப்பார்ந்து குளிர்க்காய்ந்தபடி
நள்ளிரவு கதைபாடும்
ஊதாரி இராப்பாடிகளுக்கு மத்தியிலோ
அங்கு எங்காவதுதான்
சித்தமிழந்து விழுந்துகிடப்பான்போல்
இன்னும் வீடுவந்து சேராதவன்
முகப்புக்கூடத்தில் விளக்கணைத்துவிட்டு
நீள் சாய்விருக்கையில்
எதையெதையோயோர்த்தவண்ணம்
அவனால் சாந்தம் தொலைத்து
வெகுநாட்களான பிறகும்
ஒப்புக்கு உயிர்சுமந்திருக்கும்
ஒளியிழந்த கூடொன்றின்
தவமிருந்த அன்பு
இன்றெல்லாம் அற்றுப்போயிற்று
ஆனால் அன்றும்
அவள் கட்டிமுடித்த கூந்தலின்
நேர்வகிடு ஒற்றையடிப்பாதையில்தான்
என் உயிர்முத்தம் சுமந்திருந்தாள் தெரியுமா
அனுசரன்