தீர்ப்பும் தீராத கேள்விகளும்
பதினெட்டு ஆண்டுகள், தொன்னூறு நீதிபதிகள், ஆறு நீதிமன்றங்கள், ஐந்து கோடி ரூபாய் செலவு என்று கடந்து ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது.
இரும்பு பெண்மணி, சர்வ வல்லமை படைத்தவர், நிர்வாகத்திறன் மிக்கவர், ஆண்வர்க்கத்தை அடக்கி ஆளும் வீரதீர துணிச்சலான பெண்மணி . பல துயரங்களை கடந்து ஒரு பெண்ணாக சாதிக்கும் ஈடு இணையில்லா ஜெ.ஜெயலலிதா. அம்மு என்று அறிமுகமாகி அம்மா என்று விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கும் இவரின் அசாத்திய வளர்ச்சி பாராட்டக்கூடியது மட்டுமல்ல, மிகுந்த ஆச்சரியம் தரக்கூடியது.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களை எதிர்த்து அரசியலில் சாதிப்பதும், முதலமைச்சராக அரியணை ஏறுவதும் அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அரசியலை மிக நுணுக்கமாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் திரு. கருணாநிதியின் சாணக்கியத்தனத்தில் எழும் பேரலையில் நீந்தி கரைசேர முயற்சிக்க ஒருசிலரால் மட்டுமே முடியும் என்று. அந்த மிக சிலரில் இருக்கும் ஒரே ஒரு பெண்மணி ஜெ. அவர்கள் மட்டுமே.
1991 இல் கிடைத்த வாய்ப்பை மிக சாதுர்யமாக பயன்படுத்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.
நிச்சயமாக ஜெ-க்கு நிகர் ஜெ தான். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு நினைத்த் காரியத்தை சாதிக்கும் இவரின் போராட்ட குணத்திற்கு நான் ரசிகன்.
ஆனால் இதற்காக மட்டுமே இவர் செய்யும் அனைத்துமே நியாப்படுத்தி ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன ?
அரசியலில் தூய்மையுள்ள ஒரு தலைவரை தேடும் தேடல் இன்னும் தொடர்கிறது.
91-96 ஆட்சியில், முதல்வர் பதவியை துஷ்பிரயோகமாக பயன்படுத்தி ஊழல் செய்ததாக திரு.சுப்பிரமணியசாமி அவர்கள், செல்வி.ஜெயலலிதாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 1996 இல் ஆட்சியில் இருந்த தி.மு. க அரசால் ஜெவின் சொத்துக்கள், ஆவணங்கள், ஆபரணங்கள், உடைகள் என்று சகலத்தையும் பறிமுதல் செய்ய முனைப்போடு ஆராய்ந்துபின்பு கைதுசெய்யப்பட்டார் ஜெ. அதுமுதல் நீதிமன்ற மேடையில் பல பல நாடகங்கள் அரங்கேற, வாக்களித்த மக்கள் பார்வையாளர்களாக வேடிக்கை பார்க்க, இன்றுவரை பரப்பரப்பை விற்பனையாக்கி பொழுப்போக்கி கொண்டிருக்கிறது ஊடகத் துறைகள்.
இடைப்பட்ட காலத்தில் ஜெ விடுதலையாகி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது கழக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் அராஜகத்தில் ஈடுப்பட்டனர்
------------------------
அந்த சமயத்தில் தருமபுரி அருகே கோவை வேளாண்மை கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து எரிக்கப்பட்டு மூன்று அப்பாவி மாணவிகளின் உயிரை காவு வாங்கியது சமூக விரோதிகள் வைத்த தீ. இறந்த மூன்று மாணவிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் எதாவது ஒரு துறையில் சாதித்துகொண்டிருக்கலாம் அல்லது இதே ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்ய வீரபெண்மணிகளாக அரசியல் களத்தில் வலம் வந்திருக்கலாம். நம்மை ஆளும் முதவராக கூட இருந்திருக்கலாம். அந்த மூன்று மாணவிகளின் குடும்பங்களை இன்று நாம் யாரும் கண்டுக்கொள்ளவதே இல்லை. அவர்களின் நிலையில் நம்மை வைத்து நாம் நினைத்து பார்க்க கூட மனசாட்சி நமக்கு இல்லை.
மனசாட்சி ஒன்று வாக்காளர்களாகிய நமக்கு இருந்திருந்தால் இந்த நாட்டில் குற்றவாளிகளின் தலைமையிடம் அரசியலாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை கண்டித்து தினமலர் நாளிதழில் “ இது உங்கள் இடம்” என்ற பகுதியில் ஒரு கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில் இருந்த முக்கிய வாசகம் . “ இவர் என்ன மக்களுக்காக போராடி சிறை சென்றாரா..? நாட்டிற்காக போராடி சிறை சென்ற தியாகியா? சிறை சென்றதற்கு காரணம் ஊழல் ஊழல் ஊழல் தானே காரணம். ஏய் முட்டாள்களே !! அரசியல் போக்கிரிகளே.!! இனியும் மாணவ சமுதாயத்தின் மீது தாக்குதல் நடத்தினால், விளைவு விபரீதமாக இருக்கும் , மாணவர்கள் நாங்கள் பொங்கினால் பொசுங்கிவிடும் உங்கள் அரசியல் ஆட்டங்கள். ” எழுதியது அன்றைய கல்லூரி மாணவன் இரா.சந்தோஷ் குமார் ( திருப்பூர் சந்தோஷ் என்ற பெயரில் கட்டுரை வெளியானது )
இதை குறிப்பிட காரணம் அன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் மத்தியில் எழுந்த கொந்தளிப்பை காட்டவே.
அந்த கொந்தளிப்பு ஏன் மக்கள் மத்தியில் இல்லை ?. வெறும் டிவி நாடகம் பார்ப்பதை போல தனியார் தொலைக்காட்சி அடிக்கடி காட்டிய பஸ் எரிப்பு காட்சியை பார்த்து “ உச் “ கொட்ட செய்தனர் அன்றி அரசியல் யோக்கியர்களின் உச்சந்தலையில் வாக்கு என்ற கல்லில் அடிக்கதெரியா மனசாட்சியற்ற மனிதர்களாகவே இருந்தனர்.
-----------------------------------------------
பிறகு விடுதலையானார் செல்வி ஜெயலலிதா. மீண்டும் ஆட்சிக்கு வந்தார். சிறப்பு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்து நடந்தது. நீதிபதிகள் வழக்கை எடுத்து நடத்த முடியா சூழ்நிலைக்கு ஆட்பட்டனர். நீதிபதிகள் மாறினர், நீதிமன்றம் மாறியது, இறுதியில் வழக்கு வேறு மாநிலத்திற்கே மாறியது. இந்த மாற்றங்களின் பிண்ணனியில் எத்தகைய காரியங்கள் நடந்தேறி இருக்கும். ஏன் மாற்றப்பட்டன. மாற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியது யார் என்பதை பற்றி தமிழக மக்கள் சிந்திக்கவே மாட்டார்கள். இந்த மாற்றங்களுக்கு இடையே மீண்டும் ஆட்சி மாற்றம் , மீண்டும் ஜெ வின் ஆட்சி என்று எல்லாம் நல்லவிதமாக அரங்கேறியது. காரணம் மக்கள மாக்கள் ஆகிவிட்டார்கள்.
வழக்கு யார்மீது நடைப்பெறுகிறது?. ஏன் நடைப்பெறுகிறது. ? குற்றச்சாட்டு என்ன ? குற்றவாளி யார் ? ஏன் நீதிமன்றம் மாறியது. ? எதிர்கட்சிகள் ஏன் குற்றஞ்சாட்டுகிறது ? பின்பு கூடி ஆட்சி அமைக்க வழிவகுக்கிறது. ஏன் ? ஜெவின் வழக்கில் தி.மு.க ஏன் இப்படி மெனக்கெடல் செய்கிறது.? காரணம் மக்கள் நலனா? இவர்கள் யோக்கியர்களா? தி.மு.க வில் ஊழல் செய்யதாவர்கள் இல்லையா?
அந்த கழகம் விட்டால் இந்த கழகம். இந்த கழகம் விட்டால் அந்த கழகம்.
இந்த கழகங்களின் முதுகில் சவாரி செய்யும் இதர கட்சிகள் . ஏன் இந்த பித்தலாட்டம். ? . மக்கள் நலனின் அக்கறையானவர் யார். அக்கறையுள்ள கட்சி எது.. ?
கேள்விக்குறி நீண்டுக்கொண்டே இருக்கிறது. நீண்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜெ க்கு எதிராக சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ குற்றவாளி என்று தீர்ப்பு அளித்து, 18 ஆண்டுகள் விளையாடிய ஒரு கேள்விக்கு விடைக்கொடுத்துவிட்டார் நீதிபதி.
நாணயமான தீர்ப்பு என்று சொல்லப்படும் என்ற தீர்ப்பின் பிண்ணனியில் கூட அரசியல் காய் நகர்த்தல்கள் இல்லாமல் இல்லை என்ற சந்தேகம் எழுந்தாலும் குற்றஞ்சாட்டப்பட்ட்வர் தவறு செய்துள்ளார் என்று நிரூபணம் ஆகியுள்ளது. தப்பு நடந்திருப்பதால். அந்த தப்பை பகடை காயாக அரசியல் களத்தில் பயன்படுத்தி ஜெ.க்கு ஆதரவாக பதினெட்டு வருடம் நகர்த்தப்பட்டிருக்கிறது.. இப்போது எதிராக நகர்த்தப்பட்டு முடிந்திருக்கிறது அவ்வளவே..! அன்றி இங்கு யோக்கியர்கள் என்று எவரையும் குறிப்பிட முடியாது.
சட்டம் சரியாக செயல்பட அனுமதித்தால் நீதி தலைநிமிரும் என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே அன்றி. இந்த தீர்ப்பால் அரசியல் மாற்றம் வரும் , ஊழல் குறையும் என்று எதிர்ப்பாத்தால் .. அது முட்டாள்தனமே.
ஆனால் ஆனால் தீர்ப்பு வெளியான பின் .. குற்றவாளி ஒருவரை அனுதாப பார்வையில் பார்க்கப்படுகிறது. எந்த ஊழல் செய்தவராக இருந்தாலும் அவரை அனுதாப ரீதியில் பார்த்து பார்த்து ஏமாந்து ஏமாந்து மீண்டும் அரசியல் அங்கீகாரம் வழங்குப்படுகிறது. அனுதாப மாயையையில் மக்களை வீழ வைக்கும் தந்திரம் மீண்டும் நன்றாக நடைப்பெறுகிறது.
தீர்ப்புக்கு பின். ஒன்றுமறியாத மக்கள் மீது வன்முறை ஏவப்படுகிறது. பொது அமைதி பாதிக்கபபடுகிறது. கடை அடைக்கப்படுகிறது. ஏன் ஏன் ஏன் ?
சிந்திக்கவும் .. கேள்வி கேட்க துணிச்சலற்ற மக்களாக நாம்.
வாக்காளர்கள் மாறாத வரை அரசியலை மாற்றவே முடியாது. சிந்திக்க தெரியா மிருகமா மனிதன் ?
சிந்திப்போம் .......!
-இரா. சந்தோஷ் குமார்