மோகனம் - கே - எஸ் - கலை
இரவுகள் நீளும் நீளும் - அதில்
இன்பங்கள் நிறையவே ஊறும் !
வரவுகள் சூழும் சூழும் - அதில்
வனிதையின் வாசனைத் தூறும் !
கன்றெனத் துள்ளித் துள்ளி-அக்
கவிதையின் வாய்மொழிப் பேசும் !
நன்றென வீசும் வீசும் - அந்தத்
தென்றலின் தாய்மொழிக் கூசும் !
பாவெனச் சின்னஞ் சிறிய -வெண்
பற்களும் சிரித்தேக் கிடக்கும் !
பூவென வண்ணஞ் சொரிய- தேன்
பூச்சிகள் அவள்விழிக் கடக்கும் !
அருவிகள் வீழும் வீழும் - அந்த
அழகெலாம் தோற்றுப் போகும் !
குருவிகள் பாடும் பாடும் -அவள்
குரலினைக் கேட்டிடச் சாகும் !
முத்தத்தை அள்ளி அள்ளி-என்
முகத்தினில் தூவிடும் போது
சித்தத்தைக் கிள்ளிக் கிள்ளி-என்
சிந்தையில் தாவிடும் மாது !
கோலங்கள் மேலும் மேலும்-அக்
கோதையால் நெஞ்சினில் கூடும் !
காலங்கள் யாவும் யாவும் -அவள்
காதலின் தேவையைத் தேடும்
-------------------------------------------------------------------மீட்டல் !