காதலுடன் பேசுகிறேன்

காதலே - நீ என்ன
கடவுளா? - இணையதளத்தில்
கடவுளைப் பற்றி எழுதும்
கவிஞர்களை விட - உன்னைப் பற்றி
கற்பனைகளால் கிறிக்கித்தள்ளும்
கவிஞர்கள் தான் அதிகம்.

காதலே - நீ என்ன
கல்லறைத் தோட்டமா? - உன்னால்
சொல்லறையில் சுகம் காணாதவர்கள்
சோகத்தையும்
சொந்தமாக்கிக் கொண்டு
சுகமாக எழுதித் தள்ளுகிறார்களே.

காதலே - நீ வரம் தரும்
கடவுளா? - இல்லை
வாலிப பருவத்தில்
வருகின்ற மரணத்தின் தூதுவனா?

காதலே - நீ என்ன
காற்றா? - உன் சுவாசத்தின்
ஊற்றாய் இவர்கள்
உயிர்மூச்சாய் திரிகின்றார்கள்.

காதலே - நீ உதயமாவது
எவரிடத்தில்? - ஆணிடமா? பெண்ணிடமா?
பருவம் பதினாறில் - நீ
பக்குவமாய் விதைக்கப்படுகின்றாய்.
விதைத்தவர்களையே நீ
வேரறுக்கப்பார்கின்றாய்.

காதலே - நீ என்ன - மின்
காந்தசக்தியா? - எளிதில்
ஈர்த்தவுடன் நாள்கணக்கில்
ஈர்த்தலை முடிக்கின்றாய்.

காதலே - நீ என்ன கொடிய நோயா?
காசுக் கொடுத்தாலும் உன்
நோய் போவதே இல்லையே.
உன் உணர்வுப் பட்டதும்
என்வீட்டுப் பருவத்தினர்
ஏங்கியே மாண்டுவிடுகின்றனர்.

நீ பற்றிக்கொள்ளவா
நாங்கள் பிள்ளைகளை ஈன்றேடுத்தோம்.
அவர்களுக்காக நாங்கள்
அயராது உழைத்தாலும்- நீ
அரவணைத்ததும் - எங்கள்
அரவணைப்புகளில்
அருவெறுப்புக் காட்டுகிறார்கள்.

அவளுக்காக அவனும்
அவனுக்காக அவளும் - மனதில்
உன்னைப் பூட்டி வைக்கின்றார்கள்.
பூட்டி வைத்த மனதுக்குள் - உன்னை
பூப்போல பூத்து குலுங்க வைக்கின்றார்கள்.

இளைய வயதினரின் மனதில் - நீ
இனம் பாராமல் வளர்கின்றாய்.
வளர்கின்ற நீ - அவர்களை
வாழ்விக்க என்ன வழிக் காட்டுகின்றாய்?

இணையதளத்தில் - உன் பெருமைகளே
அதிகம் தெரிகிறது.- அதிலும் நீ
ஆர்ப்பரித்த சுனாமி அலைகளே அதிகம் எனலாம்.

ஒரு ஆணை நினைத்து
ஒரு பெண்ணும் - ஒரு பெண்ணை நினைத்து
ஒரு ஆணும் புரிகின்றப் பரிமாற்றங்கள்
ஏக்கத்தின் விளிம்பாகத் தெளிக்கின்றது.

காதலே - நீ ஆண்பாலா? பெண்பாலா?
என்ன இருந்தாலும் உன்னிடத்தில்
அன்பால் நடந்துக் கொண்டாலும்
ஆதங்கத்தை அல்லவா தருகின்றாய்.

யோசித்துப் பார். - யாசகர் யாரென்று?
இளம் மனங்களை நேசித்துப்பார்.
இன்பத்தின் முகவரி யாரென்று?
நீ தொடுவதால் இன்பமா? - இல்லை
நாங்கள் உன்னை ஏற்றுக் கொள்வதால் இன்பமா?

இன்பத்தின் திறவுக்கோல் எது?
நீயா? இல்லை நாங்களா? - யோசித்து வை.
நான் மறுபடியும் உன்னை சந்திக்கிறேன்.

எழுதியவர் : சு. சங்கு சுப்ரமணியன். (11-Oct-14, 5:27 am)
பார்வை : 113

மேலே