அறுபது வயது குடு குடு கிழவன்

நடுத்தர வர்க்கம்,
போராட்டமான வாழ்க்கை,
தூக்கி விட, தடவிக் குடுக்க
யாருமில்லை.

ஆடலையும்,
பாடலையும்,
காதலையும் நுகர்ந்தது
சினமாவில் மட்டும் தான்.

முட்டி மோதி,
கற்றுத் தேறி.
முடிந்த வரை,
ஞாய வழியில் சென்று.

வேலையும் வாங்கி,
நிம்மதிப் பெறுமூச்சு விடுவதற்க்குள்,
அடுக்கடுக்காய் குடும்பச் சுமைகள்,
குழுமி நின்று கழுத்தை நெருக்கியது.

உடன் பிறந்தோர் நிலை உயர,
அலுவலகத்தில் அடைபட்டுக்,
கரைந்தேன்.

முதிர் கண்ணனாவதர்க்குள்,
கனாக் கூட காணாமல்,
கரம் பிடித்தேன்.

இருக்கப் பட்டவனுக்கே,
ஆசை அறுபது நாள்.
எங்களைப் போன்றோருக்கு,
ஆறு நாள் ஆசை இருந்தாலே அதிகம்..

ஊதியம் பெருக,
அறிவை பெருக்கி.
குடும்பச் சுகத்தை பின் தள்ளி.

உயர் பதவிகளே, உயிரென மதித்து.
அலுவலக இலட்சியத்திற்காக
பாடு பட்டு.

திறமையானவன் என பெயருமெடுத்து.
ஒரு நாள், ஒய்வு பெற்றேன்.

இன்று விடிந்தும், விடியாமலும்,
சிறு நீர் சீற்றம்,
என்னை சித்திரவதை
செய்யத் துடங்கியது.

மங்கிய கண்கள் கொண்டு,
நான்காவது முறை ஜன்னல்,
திரையை விலக்கிப் பார்த்தேன்.

இவ்வளவு நேரம் கண்ணாம்பூச்சி
ஆடிக் கொண்டிருந்த சூரியன்,
இப்போது அகப்பட்டுவிட்டான்.
ஆம் விடிந்து விட்டது.

இனி நான் எழுந்தாலும்,
நடந்தாலும், விழுந்தாலும்,
பிறர் தூக்கம் தடை படாது!

வலுவிழந்த வலதுகையை,
மெதுவாக பின்னிழுத்து,
கைமூட்டை படுக்கையில் ஊன்றி,
உடல் தூக்கி, ஒட்டிக்கிடந்த
கால்களை அசைக்கப் பார்த்தேன்,

ஏனோ அசைய மறுத்து,
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

தட்டி எழுப்ப இடது கை தூக்கும்போது,
கோபப்பட்ட வலது கை மடித்துக்கொண்டு,
என்னை குப்புறத் தள்ளியது.

இதை ஜன்னல் வழியே,
கண்டு கொண்ட சூரியன்,
குலுங்கி குலுங்கி சிரித்து,
என் கண்களை கூசியது.

அறை மணி நேரப்
போராட்டத்திற்க்குப் பின்- அசைந்தது
என் இடது கால்.

அசைத்து அசைத்து இரண்டு,
கால்களையும் கட்டிலுக்கு
வெளியே தள்ளினேன்.

மடித்திருந்த வலது கையை,
உள்ளங்கை கொண்டு நிமிர்த்தி,
தலையாட்டி பொம்மைபோல்,
விசிறி அமர்ந்தேன்.

இந்நேரம் கால்கள்,
தரை பதிந்திருக்கும் என்று
நம்புகிறேன்.

கண்ணாடி எடுக்க வளைந்தபோது,
முதுகெலும்பு மடங்க மறுத்தது,
மரண வலியை முழுங்கிக் கொண்டு,
எடுத்துவிட்டேன்.

ஏனோ கண்ணாடி அணிந்தும்,
பார்வையில் மாற்றம் காண முடியவில்லை.

அருகிலிருந்த நடை பழக்கியை,
தர தரவென இழுத்து கொண்டேன்.

இரு கைகள் பற்றி எழ
முயன்றேன், பலனில்லை.
மூன்று முறை தொடர்ந்தேன்,
அதே நிலைதான்.

யோசித்தேன்...
புரிந்துவிட்டது.
என் வலது கால் பாதம்,
இடதுகால் மேல்,
சுயநினைவின்றி,
சிலுவையில் அறையப் பட்டதுபோல்
சிக்கிக் கிடந்தது.

பக்குவமாய் பேசிபேசி,
ஒட்டிக் கிடந்தவரை பிரித்துவிட்டேன்.

சிறுநீர் சீற்றம் கொஞ்சம்,
கொந்தளித்தது.

அவசரமாய் எழ முயன்றேன்,
முகத்தில் மட்டுமே அவசரம் தெரிந்தது,
உடல் உரல்போல உறுதியாய்
உறைந்திருந்தது.

எப்படியோ, தட்டுத்,
தடுமாறி, தவழ்ந்து,
குனிந்த படி நடை பழகியை
கட்டியபடி நின்றேன்.

இடது மூட்டில் ஈட்டி
ஒன்று பாய்ந்தது.
பல்லைக் கடித்துக்கொண்டேன்.

வலது காலோ வலுவிழந்து,
சரியத் தொடங்கியது.
இடது கையால்,
முட்டுக் கொடுத்து பார்கிறேன்.

பட படவென வலது புற எலும்பு,
துடி துடிக்க ஆரம்பித்தது.

உடல் முன்புறம் வளைய வளைய,
தரையில் விழுந்து விடுவேனோ என்ற பயத்தில்,
கைகள் கொண்டு பின்புறம் ஒரே
தள்ளாய்த் தள்ளி, படுக்கையில் விழுந்தேன்.

விழுந்ததில்,
கட்டில் தலைமாட்டில்,
பின் தலை மோதி,
வலி தாங்காமல் வாய்
திறந்து கூவிவிட்டேன்.

ஆறு மணிக்கு அயர்ந்து இருந்த மகன்,
அப்பாவென்று ஓடி வந்தான்.

வலுக்கட்டாயமாக தண்ணீர் குடுத்து,
என்ன வேண்டும் என்றான் -கோபத்தை
அடக்கிக் கொண்டே.

சிறுநீர் என்றேன்!
தோல் கொடுத்து,
தூக்கி விட்டு,
நிற்க்க வைத்தான்.

தத்தி தத்தி நகர்ந்தேன் -நடை
பழக்கியோடு.

பாத்ரூம் நெருங்குவதற்குள்,
இடைமறித்து, மாமா என்ன ஆச்சு என்றாள் -என்
மருமகள்.

எடுத்துரைப்பதற்குள் ,
மூத்திரப்பை வீங்கி,
அடக்க முடியாமல்,
தொள தொள டிராயரை,
நனைத்துக் கொண்டு,
தரையில் படர்ந்தது சிறுநீர்.

அவமானத்தை மறைக்க,
கூனிக் குறுக்கி,
குழந்தை போல் சிரித்தேன்......

எழுதியவர் : கணேஷ்குமார் balu (12-Oct-14, 1:09 am)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 506

மேலே