எதற்கிந்த வெடிகள்

எதற்கிந்த வெடிகள்?

ஊரெங்கும் புகைமூட்டம்
கண்ணைப் பறிக்கும்
மின்னல் கீற்று
செவிப்பறையச் சேதமாக்கும்
அதிரடி இடிவெடி.
புயல் மழையால் அல்ல;
நாடெங்கும் திருவிழா
நரகாசூரன் அழிந்ததற்காம்.
ஊடகங்கள் வந்தபின்னே
நாள்தோறும் திருவிழாத்தான்;
உலகமே நம்கையில்.
காலத்தின் மாற்றத்தை
கண்கூடாய்ப் பார்த்தபின்னும்
வெடிகளை வெடித்து இன்புறுவோமோ?
வெடியில்லாத் திருவிழா இல்லை
பிறந்த நாளுக்கு வெடி
திருமணக் கொண்டாட்ட்த்தில் வெடி
இறுதிப் பயணத்தில் வெடி
சிறைச் சாலையிலிருந்து
வெளிவரும் தலைவரை
வரவேற்க வெடி
விளையாட்டில் வென்றால்
அதற்கும் வெடி
திரைப்படம் வெளிவரும் நாளன்று
களிப்பில் வெடி
வெற்றி விழாக்களில் வெடி.
அரசியல் கூட்ட்த்திற்கு வெடி
மஞ்சள் நீராட்டுக்கு வெடி.
வெடியில்லா நிகழ்வு?
நல்ல வேளை அலுவலகங்கள்
வகுப்பறைகள் தப்பிப் பிழைத்துள்ளன!
எல்லாவற்றிற்கும் வெடிவெடித்து
என்ன சாதிக்கப் போகிறோம்?
இயற்கையின் ஆயுளை
குறைக்கும் வேலைதானே
நாம் செய்வதெல்லாம்.
இயற்கையைக் கொஞ்சங் கொஞ்சமாய்
நாசப்படுத்தும் போது,
நாம் மனிதர்கள் என்பதை
அடிக்கடி நாம் மறப்பதுதான்
நாம் செய்யும் இயற்கையால்
மன்னிக்க முடியாத, இயற்கையிடம்
மன்னிப்புக்கு இடமில்லாத தவறு.

எழுதியவர் : மலர் (17-Oct-14, 4:01 pm)
Tanglish : etharkintha vedigal
பார்வை : 296

மேலே