பெண்புகழ்
மின்னு மிருகண்ணும் மயக்கிட
பின்னு மிடையன்ன நடையினில்
இன்னு மொருசின்னப் பயலென -உருமாறி
கன்னி இவள்கண்மை கருப்பினில்
உன்னிச் செயுமின்னல் சிரிப்பினில்
தன்னிச் சையைஎன்னப் புகலுவேன் -தடுமாறி
விண்ணிற் சுடர்வண்ண நிலவென
எண்ணின் முதலன்ன அழகென
மண்ணின் மலர்சொன்ன மொழியென -புகழ்வேனோ
திண்ணம் எனைத்திண்ணும் உருவினள்
கிண்ணம் மதுபின்னம் சுகத்தினில்
எண்ணம் நிறையன்னக் கிளியிவள் -அடைவேனோ
வெட்கப் படும்சிட்டுக் குருவியோ
நட்சத் திரப்பொட்டுத் திலகமோ
உச்சந் தலைவச்ச மலரினில் -உருகேனோ
மச்ச மதுசொச்சம் உரைத்திடும்
குச்சி இடைமிச்சம் கலக்கிடும்
கச்சை யதுமிச்சை பெருக்கிடும் -கலங்கேனோ
வட்ட முகம்வெட்டும் முறைப்பினில்
விட்டு விடத்திட்டும் முறையினில்
கிட்ட வரசுட்டு எரிப்பவள் -இருந்தாலும்
மெட்டுச் சுரத்தெட்டாம் சுரமிவள்
விட்டுத் தரச்சற்றும் மனமிலை
கட்டித் தொடும்திட்ட முடன்தினம் -அலைவேனே !