அம்மா

[என்னைப் பெற்றெடுத்த தாய்க்கு இந்த கவிதை சமர்ப்பணம்......]

பத்து மாதங்கள்
------- பரிதவித்த காலங்கள்
பெத்து எடுக்க நீ
------- பிரசவித்த நேரங்கள்

அம்மா உன்முன்னே
------- அனைத்தும் தோற்குமம்மா
சும்மா சொன்னாலும்
------- சொர்க்கமும் ஏற்குமம்மா

வச்சா கைமணக்கும்
------- வறுத்தா நெய்மணக்கும்
பச்சப் பாலகனைப்
------- பார்த்தால் பால் சுரக்கும்

சிசுவைப் பாலூட்டி
------- சிறப்பாய் வளர்த்ததிலே
பசுவை தோற்கடித்து
------- புரட்சி செய்தாயே..

வாரி அணைச்சுக்கிட்டு
------- வழிநெடுக்க நீ பாடும்
ஆரீரோ தாலாட்டு
------- ஆஸ்காரை மிஞ்சுமம்மா

விவரம் தெரியாத
------- வயதில் நான் செய்யும்
தவறைக் குறிப்பிட்டு
------- தயவாய் கண்டிப்பாய்

கண்டிப்பில் ஒருசொட்டு
------- கண்ணீர் நான் சிந்தி விட
கண்கெட்ட கல்லென்று
------- கடவுளையும் தண்டிப்பாய்

பள்ளிப் பருவத்தில்
------- பசி தாங்க மாட்டேன்னு
அள்ளிக் கொடுத்துவிட்டு
------- அரைவயிறு நீ உண்பாய்

பொழுது போச்சே என்
------- புள்ள வரலேன்னு
அழுது தீர்த்திடுவாய்
------- ஆறு, குளம் தேடிடுவாய்

தடுக்கி நான் விழுந்தால்
------- தவித்து நீ போவாய்
தடுமாற்றம் எனக்கென்றால்
------- தடம் மாறும் ரயிலாவாய்

காய்ச்சல் வருமேன்னு
------- கசாயம் எனக்கூட்டி
ஓய்ந்தே போனாயே
------- ஒருநாளும் தூங்கலையே

தேய்த்த தைலத்தின்
------- கை வாசம் மாறலையே
சாய்ந்த உன் மடியின்
------- சந்தோசம் தீரலையே

மருந்தை நான் தின்றால்
------- கசப்பை நீ குடிப்பாய்
வருத்தம் எனக்கென்றால்
------- வலியில் நீ துடிப்பாய்

பரிட்சை நானெழுத
------- தூக்கம் நீ தொலைத்தாய்
விருட்சம் நானாக
------- விழுதாய் நீ முளைத்தாய்

பஞ்சு மெத்தையிலே
------- படுத்தாலும் அன்றுந்தன்
நெஞ்சக் கூட்டுக்குள்
------- நானிருந்த நாள் வருமா?

கொஞ்சம் அமிழ்துண்ணும்
------- குடுப்பினை (யே) பெற்றாலும்
பிஞ்சு மார் மீது
------- பால் குடித்த சுகந்தருமா?

எத்தனையோ கவிதைகளை
------- எழுதிவைத்தேன் எனக்காக
பெத்தவளே இக்கவியை
------- பெத்தெடுத்தேன் உனக்காக

எழுதியவர் : ஜின்னா (26-Oct-14, 3:02 am)
Tanglish : amma
பார்வை : 1013

மேலே