முனாஜாத்

துணையாக வருவாயே
துன்பங்கள் தீர்ப்பாயே
இணையில்லா என்னிறைவா
இங்கேநான் தவிக்கின்றேன்

இல்லாத என்னையிங்கு
இருக்கும்படி பிறக்கவைத்தாய்
வல்லோனே அல்லாஹ்வே
வழியெங்கும் உன்னருளே

உயிர்தந்தாய் உடல்தந்தாய்
உணவதுவும் நீதந்தாய்
பயிர்வளர்க்கும் பான்மையைப்போல்
பக்குவமாய் வளர்த்துவிட்டாய்

அறிந்துன்னைப் புகழ்ந்திடவே
அறிவதனை நீகொடுத்தாய்
மறந்துன்னை மாட்டிக்கொண்டேன்
மறுபடியும் மன்னித்தாய்

தாய்தந்தை பாசமது
இரத்தத்தால் வந்ததுதான்
தலைவன் உன்னன்பிருந்தும்
தறிகெட்டுத் திரிந்தேனே

நோய்வந்த போதுமட்டும்
நொந்துதினம் வீழுமட்டும்
தூயோனே உன்நினைப்பு
தேறிவிட்டால் தன்முனைப்பு

நானுன்னை வணங்குவதால்
நாயன் உனக்கேதுமில்லை
நீயென்னைப் புறக்கணித்தால்
போகும்திசை எதுவுமில்லை

அற்பத்துளி ஒன்றெடுத்து
அழகாக வடிவமைத்து
கர்ப்பத்தினில் வளர்த்தஉன்னை
கல்பென்றும் நினைக்கலையே

நான்தவறிப் போகாமல்
நானிலத்தில் வாழ்ந்திடவே
வான்மறையாம் குர்ஆனை
வழங்கிநின்ற பெரியோனே

பாவங்கள் சிலசமயம்
மூழ்கஎனை வைத்தாலும்
தாவிவந்து காத்துநிற்கும்
தன்மையினை நான்மறவேன்

பாடிடவே நான்தொடங்க
பார்த்துஅதை முடிப்பவன்நீ
தேடித்தினம் வாடுகிறேன்
திருவருளைத் தாஇறைவா

எழுதியவர் : அபி (26-Oct-14, 8:03 pm)
பார்வை : 92

மேலே