கடவுளா காகிதமா

கடவுளா காகிதமா?

செல்லாக் காசெனினும்
சிருங்கார ரசத்தில்
சிரிப்பவனே!
எம் வீட்டு ஏழ்மையில்
தெரிகிறதா உன்
புன்னகை?
உன் விரிந்த
காது மடல்களேந்திய
கண்ணாடி வழிப் பார்த்தால்
எம் மக்களின்
அவலங்கள் தெரிகிறதா?

பல்லாண்டுகள் ஒரேயிடத்தில்
இருப்பதினால் உன்
கண்ணாடியில் தூசிப்
படிந்து போயிருக்கும்!
ஏழை மக்களின்
ஒரு சொட்டுக் கண்ணீர்
தொட்டு என் தாயின்
சேலையின் கந்தல் துணியால்
துடைத்து அதன்
வழியே பார்
எம் தேசத்தை!

அரைக் கோவணம் கட்டி
அடித்தட்டு மக்களை
நினைவு கூர்வதாய்
சொன்னாய்!
இன்னும்
அடிமாட்டுச் சந்தையில்
எம் உடன்பிறந்தோர்
மாற்றுக் கொவணமின்றி
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லல் பட்டு
கூக்கிரலிடும் ஏக்கப்
பெருமூச்சு கேட்கிறதா
உன்காதுகளில்?

உன் போன்றோர்
வாங்கிய சுதந்திரம்
சுதந்திர தினத்திற்கும்
குடியரசு தினத்திற்கும்
தின்று வீசிய
மிட்டாய் காகிதம் போல்
காற்றில் பறந்து
குப்பையொதுங்கும்
கருமம் பார்!
செழித்தோங்க கனவு கண்ட
பாரத தேச மக்கள்
பஞ்சம் பிழைக்க வழியின்றி
அந்நிய நாட்டில் அகதிகளாகி
மரணதண்டனை பெறும்
அவலம் பார்!

உன் மந்திரப்
புன்னகையேந்திய
கவுரவ காகிதங்கள்
டாலராகவும் யூரோவாகவும்
மாற்றப் பட்டு
அந்நிய நாட்டு வங்கியில்
அடைகாக்கும்
அவலத்தைப் தெரிகிறதா
உன் கண்களுக்கு?

உனக்கென்று ஓரிடத்தைப்
பிடித்துக் கொண்டாய்.
மாகாத்மாவாய்,
மகோத்வமாய்!
காலாத்தாலும் அழியாத
காவியப் புதல்வனாய்!
கடவுளுக்கும் மேலான
ஓர் இடத்தை!
எம் ஊரில்
காசுள்ளவன் கடவுளடா!
அப்படியெனில் நீ
கடவுளா? காகிதமா?

...........................................சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (5-Nov-14, 7:09 pm)
பார்வை : 120

மேலே