இறக்காமல் பிறக்கிறேன்

சோகங்கள் தந்த அனுபவ வலியில்
புதியவனாய் நான் பிறக்கிறேன்!
ஏழை மனிதனுக்கு உதவிடும் நேரத்தில்
மறுபடியும் புதிதாய் பிறக்கிறேன் !
நேர்மையை விலை பேச வருபவனை
தவிர்க்கும் போதும் பிறக்கிறேன்!
மனித நேயத்தால் மன்னிக்கும்
போதெல்லாம் பிறக்கிறேன் !
குழந்தையின் சிரிப்பை
கொண்டாடிடும் போதும் பிறக்கிறேன்!
கொடுமைகள் கண்டு குரல்
கொடுக்கும் போதும் பிறக்கிறேன் !
பகை கொண்டு பாய்ந்து வருபவரை
பகுத்தறிவால் தடுத்திடப் பிறக்கிறேன் !
நல்ல இசையினில் மூழ்கும்
தருணத்தில் மீண்டும் பிறக்கிறேன்!
என்னிலும் எளியோர் துன்பத்தை
துடைத்திடும் வாய்ப்புகளில் பிறக்கிறேன்!
இன்னும் எத்தனை எத்தனை
பிறவிகள் நான் பெறுகிறேன் ஒரு பிறவியில் !
அதனால் ..இறக்காமல் நிதமும்
பிறந்து கொண்டே இருக்கிறேன் !