எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 16
கன்னக் குழிவு 1
கவிதை நினைவு வரும்
உன் கன்னக் குழிவு
தென்றல் தொட்டு தீட்டியதோ
கவிஞன் கண்பட்டு நாணியதோ
என்னவென்று எழுதவது
==========================================================================
சாயாத கோபுரம் 2
பீசா கோபுரம்
சாய்ந்து நின்றாலும்
உலக அதிசியம்
ஜனநாயக கோபுரம்
சாய்ந்து நின்றால்
சரித்திர அவமானம்
========================================================================
வானமெல்லாம் நீலம் 3
வானமெல்லாம் நீலம்
அதில் தவழ்ந்து வந்தது நீல நிலவு
உன் இதயமெல்லாம் மௌனம்
மௌனத்தை கலைத்து நின்றது
என் கவிதை நினைவு
உன் உள்ளம் எல்லாம் அந்திச் சிவப்பு
அந்தச் சிவப்பினில் மலர்ந்தது
என் காதல் சிரிப்பு
அந்த சிரிப்பெல்லாம்
உன் செவ்விதழில் கோர்த்த
மாதுளை முத்து
அந்த முத்துக்களே
என் சிந்தனையின் வித்து
அந்த வித்துக்கள்
அள்ளி தந்தது
இந்த கவிதை சொத்து
========================================================================
தாவணித் தென்றல் 4
ஆவணி மாதத்தில்
அசைந்து வரும்
தாவணித் தென்றலே
குனிந்து நடந்து வரும்
கோபுர அழகே
கொஞ்சம் நிமிர்ந்து
பார்த்தால் என்ன
பார்க்கும் விழி இருந்தும்
பார முகம் ஏனோ
பக்தன் காத்திருக்கிறேன்
கண்டும் காணாமல்
செல்வதும் சரிதானோ ?
=======================================================================
சிலையே உன்னை செதுக்கியவன் யார் 5
மலையில் உறங்கும் அழகை
துயில் எழுப்பி மலரச் செய்தாய்
சிலை வடித்தாய்
மாமல்லபுரம் படைத்தாய்
ஆலயவாசளிலும் கோபுர அழகிலும்
கோவிற் தூண்களிலும்
உன் கைவண்ணங்களை இறைத்தாய்
கண்ணிற்கு தெரியாத கடவுளையும்
உன் கைவண்ணத்தினால்
கண்ணைப்பறிக்கும் எழில் வடிவாக்கினாய்
ஆண்டவனைப் போற்றும் ஆலயமும்
அன்று ஆண்டவனின் பெயர் சொல்லி வாழும்
சிலை வடித்த செம்மலே
சிற்ப கலை தந்த தேவனே
நின் பெயர் எங்கே தேடுகிறேன்
உன் கலையை சிலையில் முதலில் போற்றுவேன்
சிலையில் வாழும் இறைவனை
பின் போற்றுவேன்
நீ கற் சிற்பி
நான் சொற் சிற்பி
========================================================================
நெஞ்சு துடிக்குதடி கொடியவளே 6
விழியில் எழுதிய வரிகள்
கண்ணீரின் கதையாய் ஆனதடி
இதழ் சொன்ன பொய்க் காதலில்
இலக்கியமும் கசப்பாய் போனதடி
இதயத்தை சிதைத்து பேதத்தை வளர்த்து
காதலின் இனிய ராகங்களை
மௌனத்தில் புதைத்து விட்டாயடி
கொடியவளே
நேசம் மறந்த உன் காதல் வேஷத்தை
நினைத்து விட்டாலே
நெஞ்சு துடிக்குதடி
=======================================================================
இறைவன் எழுதிய கருமை ஓவியம் 7
அவள் கருப்பு நிற ஐஸ்வர்யா
காதோரம் சூடியிருப்பதோ
சிவப்பு நிற ரோஜா
கையில் ஏந்தியிருப்பதோ
கல்லூரிப் புத்தகம்
கடையில் வாங்கி வந்ததோ
சிவப்பாக்கும் க்ரீம்
அந்திக் கருமையின்
அழகிய வடிவம் நீ
ஆதவனுக்கு
சொந்தம் நீ
நைல் தந்த எழில் அரசி
கிளியோபாத்திரவும்
கருப்புதானடி
உன் முல்லை சிரிப்பு
கருமை திரையில்
வரைந்த
வெள்ளைக் கவிதையடி
உனக்கு ஏதுக்கடி
இந்த வெளி பூச்சும் வேடமும்
இறைவன் எழுதிய
கருமை ஓவியமே
========================================================================
காலடி கொலுசின் சத்தம் 8
பார்க்கும் ஓவியமே
பாடும் தென்றலே
புன்னகை பூக்கும்
மலரே
அசைந்து வரும்
சிலையே
பெண் எனும்
தேவதையே
என் கவிதை எல்லாம்
உன் காலடி கொலுசின்
சத்தம்
கை வளை ஓசை
உன்
புன்னகையின் ராகம்
========================================================================
வண்ணங்கள் எண்ணங்கள் 9
வானவில் வண்ணங்கள்
வளைந்து நின்றால் அழகு
எண்ணங்கள் நெஞ்சில்
நிமிர்ந்து நின்றால் அழகு
========================================================================
கதிரவன் 10
கதிரவன்
காலமெனும் கரங்கள்
கொண்ட படகோட்டி
அவன் படகில்
மனிதன் முதல்
கடைசி ஜீவராசிவரை
எல்லோரும்
பயணிகள்
========================================================================
-------கவின் சாரலன்