இறகல்ல பறவை -பொள்ளாச்சி அபி

மேலோட்டமான
நான்கு வர்ணங்களிலான
என் இறக்கைகளில்,
மங்கிய ஐந்தாம் வர்ணத்துடன்
கறுப்புதான் சற்று அதிகம்..!

காற்றில் மிதக்கின்ற
என் பயணங்களில்
எப்போதும் எதிர்ப்படுகின்றன
உதிர்ந்தலைகின்ற
கறுப்புவர்ண இறகுகள்..!

எனக்குமுன் இறகுதிர்த்த
பறவைகளின் வரலாறுகளாய்
அவை எனது பறத்தலை
பயமுறுத்திக் கொண்டேயிருக்கின்றன..!

பரந்திருக்கும்
கறுப்புவர்ண இறகுகளை
‘உதிர்த்துவிட்டு’ பறப்பதெனில்
அவைகள் எப்படி
பறவைகளாயிருக்க முடியும்.?

வெளிச்சத்தின் மூலத்தை
காணப்போவதாய்ச் சொல்லி
எனக்கு முன்னே சென்றிருந்த
அந்தப் பறவைகள்
என்னவாகியிருக்கும்..?

இன்னும் கரையாத
மத மலைகளை,
சாதி வேலிகளை,
கடந்திருக்க நியாயமில்லை.!

தரையில் சிவந்தபடி
புகைந்து கொண்டிருக்கும்
நெருப்பில் அவை
வீழ்த்தப்பட்டிருக்கலாம்..,
சாத்தியமுண்டு..!

இறகுகளை
உதிர்க்காமல் பறப்பது..,
எல்லைகளை சுருக்குகிறது.
பயணத்தை சுகமாக்குகிறது.

வெளிச்சத்தின் முதல்புள்ளி
எனை அணைத்ததில்
எனது கறுப்புவர்ணச் சிறகு,
மங்கிய ஐந்தாம் வர்ணத்துடன்
ஒளிரத்துவங்கியுள்ளது இப்போது..!
-----------------
குறிப்பு-தோழர் சேகுவேரா கோபியின் எண்ணம் பகுதியையும்,தோழர் குமரேசன் கிருஷ்ணன் அளித்த தலைப்பில் தோழர்கள் ஜின்னா மற்றும் சரவணாவின் கவிதைகளைப் படித்த பாதிப்பு.எளிமையான எனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த அவர்களுக்கு எனது நன்றிகள்..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
-------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (8-Dec-14, 9:12 pm)
பார்வை : 173

மேலே