காற்றில் மிதக்கும் இறகுகள்-தேடல் 7-வித்யா

காற்றில் மிதக்கும் இறகுகள்-தேடல் 7

குடைதேடி முடிந்துபோன
மழைக்காலம்
போர்வைதேடி தகித்துபோன
குளிர்காலம்
அம்மணப்பாதங்கள் ரசித்தே
கொழுத்துப்போன வாழ்க்கைப்பாதை
என்ற பாடலோடு காற்றில்
மிதந்தது இறகொன்று.......!!

செவிட்டு நந்தியின்
காதினில் ஓதியவேதமாய்
சிவப்பு பலூனும்
புதுப்புத்தக வாசனையும்

நேற்றுப்போட்டக் கோலத்தின்
புள்ளிகளை எண்ணிக்கொண்டே
கொதித்தது அடிமைதேசத்தில்
எண்ணெயும் இளம் தளிரும்

அரக்கு மாளிகைக்கனவு சுமந்து
வெந்துக்கொண்டிருந்தது
வார்த்தெடுப்பில் களிமண்

பகற்கனவுகளின்
பெருவெளிச்சமாய்
தீப்பெட்டிக்குள்
சிறைவைக்கப் பட்டிருந்தது
உறங்கா இரவுகள்

விடிய விடியக்
கண் விழித்திருந்தது
ஒற்றை மெழுகுவர்த்தியும்
ஓராயிரம் தீக்குச்சியும்

பசியால் வயிற்றைக்கிள்ளிய
அட்டைப்பூச்சிகளின்
உயிர் உறிஞ்சல்களில்
கன்னம் கிள்ளும்
அன்னையின் ஸ்பரிசம்
அழுது கொண்டே
புன்னகைத்தது கண்ணீர்

ஏளன இரவுகளில்
எரி நட்சத்திரக் கனவுகள்

அழுக்கு உடையில்
நிலா.......

நிலவென்றானபோது
கிளிஞ்சல்கள் நிர்வாணம்
விற்றுக்கொண்டிருந்தது

வானம் சுருங்கி
நிலவே வானமானது

கழுகுகளின் அலகுகள்
நிலவு தின்றன
நடை பாதையில்
ஜீவனெல்லாம்
தடைபட்டு நின்றன

கவியெல்லாம் கண்ணீர்சொரிய
காற்றுக்கும் மூச்சு முட்டியது
கனவெல்லாம் சிலுவை சுமந்தது

ஒளியில்லா
வானில் நித்தம்
விடிவெள்ளி முளைக்கும்
எனினும்
தொடுவானம் தூரமாகும்

"யாரின் கைவண்ணம்
இந்த சிறகுகளின்
வண்ணமென "
முனகிக்கொண்டே

கனவுகில் மூழ்கி
கற்பனையில் நீந்தி
கவிதைக்கரையேறி
கண்ணீர் வெளியில்
ஈரமாக உலர்ந்தது
இறகு..................!!









----------------------------------------------------------------------------
வாய்ப்பு வழங்கி கவிக்கருவும் கொடுத்து ஊக்கப் படுத்திய நண்பர் குமரேசன் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள்.

எழுதியவர் : வித்யா (9-Dec-14, 5:05 pm)
பார்வை : 184

மேலே