நண்பன்
நீ
என்னுள்
ஏற்படுத்திய
உணர்வுகளைக்
கூட்டிக் கழித்து
பெருக்கி
வகுத்துப் பார்த்தேன்,
" நட்பு " எனும்
விடை வந்தது !
பேருந்துப்
பயணத்தில்
உன் தோளில்
தலை சாய்த்துக்
கொள்ளும்போதெல்லாம்
கேட்கத் தொடங்குகிறது
நட்பின் தாலாட்டு !
காற்றுவாக்கில்
நானும்
உள்ளிழுக்க நேரும்
என்ற
ஒரு காரணத்துக்காகவே
பல வருடங்களாகப்
புகைத்துக் கொண்டிருந்த
சிகரெட்டை
நிரந்தரமாகப்
பகைத்துக் கொண்டவன்
நீ !
பேச்சு சுவாரசியத்தில்
நான் கவனிக்க மறந்த
என் துப்பட்டாவை
சரி செய்துகொள்ளும்படி நீ
சைகையால் உணர்த்தியதில்
காப்பாற்றப்பட்டது
என் மானம் மட்டுமல்ல
நம் நட்பின்
கண்ணியமும் தான் !
உனது
நட்புமட்டும்
இல்லையென்றால்
ஏதோவொரு
பொழுதுபோக்குக் காதலில்
வீழ்ந்து
எப்போதோ
காணாமல் போயிருப்பேன்
நான் !
என் இல்லம்
வந்து
என் அம்மாவை
நீயும்
அம்மா என்று
அழைக்கும் போதெல்லாம்
கண்ணீரைக்
கட்டுப்படுத்தவே
முடிவதில்லை
அண்ணன் இல்லாத
எனக்கு !
இவ்வுலகில்
நான்
வாழும் வரையிலும்
என்னுடன் வாழும்
அப்பா வேண்டுமென்று
இறைவனிடம் கேட்டேன்,
நீ கிடைத்தாய் !