வாடகை சைக்கிள் - சிறுகதை
சண்முகம் அண்ணன் சைக்கிள் கடை எங்க ஊர்ல ரெம்ப பிரபலம் . எப்போதும் நாலஞ்சு பெருசுக அரட்ட சத்தம் கேட்ட வண்ணம் ரெம்ப ககலப்பா இருக்கும். சண்முக அண்ணன்கிட்ட சைக்கிள் எடுக்குறது சாமான்ய வேல இல்ல .ஏகப்பட்ட கண்டிஷன் போடுவாரு .சின்ன பசங்ககளுக்கு சைக்கிள் கொடுக்க மாட்டாரு .போய் அப்பாவை கூட்டி வர சொல்லுவாரு .அதுவும் யாராச்சும் புதுசா ஊருக்கு வந்து சைக்கிள் கேட்டுட்டா அம்புடுதான் யாரு ,என்ன ,எங்கே ,யாரு வீட்டுக்கு வந்துருக்காரு எல்லாம் விசாரிச்சுட்டு யாராச்சும் கேரண்டி கொடுத்தாதான் சைக்கிள் கொடுப்பாரு.
என்னக்கும் எப்படியாச்சும் சின்ன சைக்கிள் ஓட்டி கத்துக்கணுமுன்னு ஆச . ஆனா நான் சக நண்பர்கள விட உயரம் கம்மி. சைக்கிள் கேட்டா ஆளப்பாரு கத்திரிக்காய்க்கு கை கால் முளைச்ச மாதிரி இருந்துகிட்டு சைக்கிள் ஒட்டுரானாம் அப்படின்னு விரட்டி விட்டுடுவாரு .
நண்பர்கள்கிட்ட சைக்கிள் எடுத்து தர சொல்லி குரங்கு பெடல் போட்டு கத்துக்க ஆரம்பிச்சேன் .அப்பறம் கொஞ்ச நாள் கழித்து கம்பியில உட்கார்ந்து கத்துக்க ஆரம்பிச்சேன் . ஒரு நாள் சைக்கிளை பேலன்சு பண்ண முடியாம குப்பாத்தா ஆயா மேல விட்டுட்டேன் அன்னைக்கு செம பூச வீட்டுல . என்னமோ டைடானிக் கப்பல் சேதம் அடஞ்ச மாதிரி ஆண்டில் பார் போச்சு அது போச்சு இது போச்சுன்னு பொருமி தள்ளிடாறு சண்முக அண்ணன் .
காலம் கடந்து வெளியூர்ல படிப்பு வேலைன்னு போயாச்சு . அந்த வருஷம் குல தெய்வம் கோயிலுக்கு பூஜை போட போயிருந்தோம் . ஊர் இப்ப ரெம்பவே மாறி இருந்தது .பழைய ஒட்டு வீடுகள் எல்லாம் கான்கிரிட் வீடாக, STD க்கு பதில் செல்போனாக , கூட்டமா இருக்கும் தபால் நிலையம் வெறிசோடி கிடக்க மாறாக இன்டர்நெட் ,ஈமைலுனு பரபரப்பா இருக்க ,திண்ணையில் அரட்டை சத்தம் வீட்டுக்குள் டிவி சீரியல் சத்தமாக மாறி போயிருந்தது.
பைக்கை எடுத்துகிட்டு கட வீதிக்கு போயிருந்தேன் .எல்லா கடைகளும் காம்ப்லக்ஸ்களாக மாறி இருக்க அங்கெ ஒரு ஓரமாய் கீத்து கொட்டகை, அட நம்ம சண்முக அண்ணன் சைக்கிள் கடை . சண்முக அண்ணன் மெலிந்து போய் அழுக்குகான கிழிந்த பனியன் போட்டுகிட்டு ரோட்டையே வெறிச்சு பாத்துகிட்டு இருந்தாரு
யாராச்சும் தெரியாதவங்களா இருந்தாலும் பிரவாயில்ல வாடகைக்கு சைக்கிள் கேட்டு வருவாங்கலானு போல் பார்வையோட அர்த்தம் இருந்தது .
பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு சண்முக அண்ணன் கடையை நோக்கி நகர்ந்தேன் . என்ன பார்த்ததும் அட வாப்பா எப்படிப்பா இருக்கே.வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா.என்னப்பா இந்த பக்கம் சும்மாதானே என்று கேட்ட சண்முக அண்ணனை ஒரு முறை உற்று பார்த்தேன் . ஒன்னு இல்லைங்கனா வர்ற வழியில பைக்கு பழுது ஆயிடுச்சு .....
ஒரு சைக்கிள் வாடகைக்கு வேணும் .....
-வைரா