நெடில் அல்ல குறில் - Mano Red
முதன் முதலில் எழுதிய
அந்த கவிதையில் வடிந்த
அத்தனை எழுத்துக்களும்
உயிர் எழுத்துக்கள் தான்,
ஆம்
உயிரில் தடவி
உணர்வில் வழித்தெடுத்த
வார்ப்பு வார்த்தைகள்..!!
அடுத்த வார்த்தையின்
அமைப்பை அதன்
அமைதி குலைக்காமல்
அடுக்க எண்ணி,
'ஆ' நெடில் அல்ல
'அ' குறில் என தொடங்குவதாய்
அமைத்த போது
அத்தனையும் அழகியின் ஆணவங்கள்..!!
நாள் பார்த்து
நாழிகை பார்த்து
தவித்து கிடந்து காத்திருந்தேன்
அடுத்த வரிக்காக.....
ஆள் அரவமில்லாத
நடுக்காட்டில்
வழிமறந்த அறிவாளியின்
உளறல் போல
மார்புக் கூட்டை கிழித்து வந்தது
இன்னொரு கவிதை வடிவம்...!!
அந்த கவிதையிலிருந்து
காதல் ரசம் சொட்ட சொட்ட
தனியாக நெளியும் என்
மென் வரிகளுக்கு,
மண்ணிலிருந்து கொஞ்சம்
விண்வெளிச்சம் காட்டினால்,
அது
இன்னொரு காதலுக்கு
தூது போகும்..!!
காற்றோ கடவுளோ
தீர்மானித்த கணம் அது,
ஓசையின்றி காம்பு துறக்கும்
மலரின் கள்ளத்தனம்
உன்னதமெனில்,
யாருக்கும் உறுத்தாத
சேதாரமில்லா வார்த்தைகளில்
ஆதாரம் காட்டும்
அந்த காதல் சாரா
காதல் கவிதையும் உன்னதமே...!!