எனது கவிதைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கிறேன் 26

நான் நான் நான் 1

நிலவை வானத்தை
மானை மலரை
கவிதையாக்கி
கவிதை மலர் கூடையை
அவளிடம் கொடுத்தேன்
மறுத்துவிட்டாள்

சர்வதேச கரன்சிக் கூடையிலும்
விலை மதிப்பற்றது என்று
சொல்லிப் பார்த்தேன்
ஏற்க்கவில்லை

ஏதுக்கடா இந்தக் கவிதை தோழா
நான் பார்த்து
ரசித்து
புரட்டிப் பார்க்கும்
ஒரே கவிதை
நீதான் என்றாள்

அன்றுமுதல்
எழுதுவதை
நிறுத்திவிட்டேன்
நான் கவிஞன் இல்லை
கவிதை
மாலைதோறும்
அவள் விரல்கள்
புரட்டிப் பார்க்கும்
கவிதையின் பக்கங்கள்
நான் நான் நான்
------------------------------------------------------------------------------------------------------------------
என்று திருந்தும் இறைவா 2

பாதிரியார்
சன்னல் அறையில்
பாவ மன்னிப்பு

பாவம் தொலைந்திட
கங்கைக் கரையில்
நீர் குளிப்பு

பத்திரிகை சினிமா
தொலைகாட்சி
அரசியல் ஆன்மீகம்
இணையதளம் வரை
எதில் எதிலும்
மனுஷனுக்கு
பாவ நெனைப்பு

என்று திருந்துமடா
இறைவா
இந்த உலகில்
பாவி மனசு
--------------------------------------------------------------------------------------------------------------------

கிழிந்து விழுந்து கிடந்த துண்டுக் காகிதம் 3

விழுந்து கிடந்தது
ஒரு துண்டுக் காகிதம்
அதில் மலர்ந்து சிரித்தது
கவிதையின் நாலு வரிகள்

என்ன அழகிய வரிகள்
மீதி வாரிகள் எங்கே ?
எழுதிய கவிஞன் யார்?
தேடவேண்டும் என்றாள்
சினேகிதி

பத்திரிகை ஆபீசிலிருந்து
திரும்பி வந்து
கோவத்தில் விட்டெறிந்து
பழைய பேப்பர்காரன்
தராசில் தொங்கி
பலசரக்கு கடை அடைந்து
பொருள் சுற்றும்
பொட்டலமாய் சேவை செய்து
மீண்டும் கசக்கி விட்டு எறியப்பட்ட
கிழிந்து விழுந்து கிடந்த துண்டுக் காகிதத்தை
நீ குனிந்து எடுத்து பார்க்கும் போது
கிழிஞ்ச கவிதையின்
எஞ்சிய வரிகள்கூட
உன் நெஞ்சைத் தொடுகிறது

எப்படித் தெரியும்
என்றாள்

எழுதியவன்
நான்தான்
என்றேன்

மீதி வரிகள்
நினைவிருக்கிறதா
சொல் சொல்
ஆர்வமும் அவசரமும்
காட்டினாள்

கவிதைக் காகிதந்தானே
கிழிந்து போனது
கவிதை நெஞ்சம் இன்னும்
கிழிந்து போய்விடவில்லை

சொல்கிறேன் என்றேன்
சொன்னேன்

அவள்
கண்கள் பளிச்சிட்டது
கண்கள் பனித்தன
மௌனமாய் வாழ்த்தினாள்
--------------------------------------------------------------------------------------------------------------------

இதயம் புத்தகம் 4

இதயம் வெறும்
வெள்ளை பக்கங்கள் இல்லை
உணர்வுகள் உயிர் ஓவியம் வரையும்
கவிதைப் புத்தகம்
--------------------------------------------------------------------------------------------------------------------

வான்மதி வெண்மதி என் நிம்மதி 5

அனுமதி கேட்டா
கனவில் வருவாய்
வெகுமதி கேட்டா
புன்னகை புரிவாய்
நீ
வான்மதி போற்றும்
என் வெண்மதி
தேன்மொழி பேசும்
கவிமதி
என் வாழ்வில் வந்த
நிம்மதி
--------------------------------------------------------------------------------------------------------------------

மனிதன் ஒரு புதுமை 6

கோழி கூவி விடிவதில்லை
மலர்கள் சிரித்து பூப்பதில்லை காலை
தென்றல் தொட்டுத்தான் சோலையா
ஆதவன் எழுவதும் மறைவதும்
விடியலும் மாலையும்
பூக்களும் தென்றலும்
சோலையும் கூவும் கோழியும்
சுழலும் உலகின் இயற்கை

சுதந்திரம் கிடைத்த பின்னும்
நள்ளிரவிலே விடிந்தபின்னும்
என்று விடியும் என்று இன்னும்
உறங்கிக் கொண்டிருகிறானே
இந்த நாட்டில் மனிதன்
அவன்தான்
இந்த இயற்கையில் உலகில்
ஒரு புதுமை
-------------------------------------------------------------------------------------------------------------------

மரண சாசனம் 7

மக்கள் மௌனமாகிப் போன
நாட்டில்
ஜனநாயகத்திற்கு
மரண சாசனம்
எழுதப்படும்
-------------------------------------------------------------------------------------------------------------------

புற்றீசல்கள் 8

யாப்பு வழி நின்று
அமைந்த செய்யுள் ஆனாலும்

யாப்பிற்கு அப்பாற்பட்டு நின்று
செய்த புதுக் கவிதை ஆனாலும்

சொல் அழகும் கருத்து அழகும்
கொண்டு நடக்கும் கவிதையே
இலக்கியம்

மற்றவை எல்லாம்
சிறிது நேரம் இறகடித்து
இலக்கிய வீதியில்
இறகொடிந்து மடிந்து விழும்
மாரிக் காலத்துப்
புற்றீசல்களே
-------------------------------------------------------------------------------------------------------------------

காலடி முதல் சீரடி வரை 9

காலடி முதல் சீரடி வரை
கால மணல் வெளியில்
எத்தனை எத்தனை காலடிச் சுவடுகள்
சுவடுகளை தொடர்ந்தால்
விதியின் வீதியிலே
பொதி சுமக்கும்
அவலம் நீங்கும்

குறடுகளின் ஒலிகேட்டால்
சுவடுகள் துலங்கும்
சுவடுகளின் வழி நடந்தால்
உயர் கதியின் உன்னத வாசல்
அகலத் திறந்து
உன்னை வரவேற்கும்
-------------------------------------------------------------------------------------------------------------------

காலடி போற்றுதல் இல்லறம் 10

காலடி வைத்து என் வாழ்வில் நீ வந்தபோது
அந்தச் செம்மை சீரடி
செய்த சுவடுகளே என்கவிதை

உன் காலடி எடுத்து அம்மியில் வைத்து
மெட்டி அணிவித்து உன்னை பார்த்தபோது
அந்தப் புன்னகையில் மலர்ந்தது
இளமையில் நம் திருமணம்

நோவினில் கால் வலியில் நீ துவண்டிடும் போது
உன் காலடி தொட்டு அழுத்திட்ட
நோவு நீங்கி நீ சிரித்திடும் போது
மகிழ்ச்சியில் துள்ளிடும் என் மனம்

சீரடி ஏழடி வைத்து என் தோளில் சாய்ந்து
உனக்காகவே நான் என்று என்னுடன் வந்தவளே
உன் கண்ணீர் துடைத்து
காலடி போற்றுதல் எனக்கு இல்லறம்
--------------------------------------------------------------------------------------------------------------------
------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-14, 4:48 pm)
பார்வை : 276

மேலே