வெள்ளந்தி விஞ்ஞானம்

உள்ளங்கை வசத்துக்கே
உரிச்சகுடுமித் தென்னங்காயி
நிமிந்து நெடுவாகுல
நீரோட்டங்காட்டிச் சுத்த....
பாக்கவந்த தாத்தாக்கெழம்
படிச்சதில்ல காந்தப்புலம்...

மலடின்னு தூத்துஞ்சனமின்னு
மாரியம்மா வெசனப்பட...

அமுக்கிராங் கெழங்கெடுத்து
அருகம்புல்லு சேத்துவச்சி
தேனோட நீகலந்து
தெகட்டாம ஊட்டிவிடு...

பானத்தண்ணி வாழப்பூவு
பக்குவமா செஞ்சிகுடு..
குளிச்ச ஏழாங்கெழம
முள்ளங்கியோட முருங்கக்காய
சேத்துவச்சி ஒன்னக்கொடு..
முத்துவரும் பத்தாம் மாசம்...

சூத்திரஞ்சொன்ன பூக்காரிக்கோ
புரோஜெஸ்டிரோன் புரியாது
ஆண்ட்ரோஜெனும் தெரியாது ...

வெள்ளிக் கிண்ணத்துல
வெள்ளச்சோறு பசும்பாலு
நையப்பெசஞ்சி நீகுடுக்க
நாக்குச் சொழட்டும் ஒம்புள்ள..
பாடிச்சொன்ன பாட்டிக்கோ
ஆன்டிசெப்டிக் அறியாது.....

செரிமானக் கோளாறுக்கு
சீரகத்தோட ஓமஎல
சேத்துக்கொதிக்க வச்சி
ஆறுனதண்ணியில
அதிமதுரங் கலந்துவிட்டு

ரெண்டுசொட்டு நீயெறக்க
நெலாவாச் சிரிக்கும்.. ஒம்புள்ள...
நாசூக்காச் சொல்லிப்போன
மூணுபுள்ள பெத்த நாத்தி
நாலுவார்த்த படிச்சதில்ல...

அறிவியலு தெரியாம
அறிஞ்சிருந்தோம் ஏகத்துக்கு....

பொரிச்சதும் வறுத்ததுமா
பொதச்ச வயித்துலேர்ந்து
பொறப்படுது வியாதியின்னு
புரியாத சனங்களுக்கு ..

என்னத்த ஆராச்சியோ..
எழவெடுத்த இங்கிலீசோ....
ஏரு மறந்த நாகரீகமோ.......!!!

எழுதியவர் : நல்லை.சரவணா (25-Dec-14, 10:12 am)
பார்வை : 249

மேலே