ஏசுபிரான் வாழ்த்து
நேரிசை வெண்பாக்கள்
மார்கழி மாதம் மதிதிகழ் நாளிலே
சீர்மிகு மாட்டுத் தொழுவினில் - பார்புகழ்
ஏசு பிறந்தானே போற்றிக் களியுரைப்போம்
வீசும் நமக்கு மருள் !
அருள்பெற்று வாழ்ந்திட அய்யன் திருவடி
ஒருசேரப் பற்றித் தொழுவோம் - இருள்நீக்கி
நல்லொளி தன்னை இறைவனும் பாய்ச்சிடுவான்
அல்லல் நெருங்கா தினி !
இனிப்புகள் தன்னை இனிதெனத் தந்து
பனிவிழும் மார்கழித் திங்கள் - மனிதருக்
கின்னருள் செய்யப் பிறந்தோன் புகழ்சொல்லி
என்றும் நிலைப்போம் நிலத்து !
நிலத்திடை மின்னும் மணியும் ! விரிந்த
மலரிடை வீசும் மனமும் - பலத்த
வளியிடை தோன்றும் விசையும் ! இறைவன்
ஒளிஎனத் தந்த அருள் !
-விவேக்பாரதி