பெருங்கலவியின் பேராசை

அனிச்சையின்
உச்சத்தில்
யதேச்சையின் கரங்கள்
கனிகளைக்
கொய்தபடியிருக்க
ஏதேன் தோட்டத்தில்
பாம்புகளின்
நெளிதல்களுக்கிடையே
மௌனத்தின்
கிண்ணங்களில்
மலர் கொத்துக்கள்
முகிழ்கின்றன !

ஸ்பரிசப் பயணத்தைத்
தொடர்ந்து
சரீரமெங்கும்
ஊர்கிறது
ஆசையின் வேர்க்கால்கள்
சாத்தான் பாம்பென !

பெருங்கலவியின்
பேராசை
கனியின் ருசிப்பென
நாக்குவழி உள்ளிறங்கி
உள்ளத்தின் உந்துதலில்
அங்கம் குலுங்க
மனம் தீண்டுகிறது !

கடவுளால் நன்மைக்காக
துவக்கப்பட்ட
முதல்பாவம் -
இன்றுவரை தவறாகவே
தொடர
பாவத்தின் வனங்களெங்கும்
ஆப்பிள்கள்
விளைந்து கொண்டேயிருக்கிறது !

ஊர்ந்து செல்லும்
திசையெல்லாம்
ஆசையினை உமிழ்ந்து
செல்லும்
அதன் இருநாக்குகளுக்கிடையில்
சிக்கியது
என்னுடையது மட்டுமல்ல .

எழுதியவர் : பாலா (27-Dec-14, 7:17 pm)
பார்வை : 100

மேலே