இது கவிதை அல்ல கவிதைக்கான கருத்து
அன்பான தளத் தோழர் தோழமைகளுக்கு வணக்கம்,
இது கவிதை அல்ல ஒரு கவிதைக்கான கருத்து அல்லது ஒரு கவிதையின் பார்வை....
25-12-2014 அன்று தோழர் ராம் வசந்த் "காற்றில் மிதக்கும் இறகு தேடல் -20" கவிதை எண்-226181 என்ற படைப்பை அளித்துள்ளார்...
முதலில் இறகின் பயணத்தில் அவர் இணைந்ததற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்....
இப்போது கவிதையின் கருவுக்குள் வருவோம்...
அவர் எடுத்துக் கொண்ட கரு அறிவியல் / எதிர்காலம் / இந்திய சந்தை....
முதலில் இந்த கருவை எடுத்து எழுதியமைக்கே அவருக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்...
ஏனெனில் இங்கு பல பேருக்கு அறிவிற்கும் அறிவியலுக்கும் உள்ள வித்தியாசம் எது என்பது இன்னும் கூட தெளிவாக புரியாமலே இருக்கிறது
அறிவென்பது வாழ்வைப் பற்றியது
அறிவியல் என்பது வாழ்வாதாரத்தைப் பற்றியது...
ஆராய்ந்து முடிவெடுப்பது அறிவு
ஆராய்ச்சியில் முடிவெடுப்பது அறிவியல்...
இதுவெல்லாம் உண்மையெனில் இந்த கவிதையும்
மனித தேடலுக்கான ஆராய்ச்சியாகவே எனக்கு தோன்றுகிறது...
காரணம் அறிவியலின் வளர்ச்சியினாலேயே நாமின்று
கணினி மூலம் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறோம்...
அப்படியென்றால் அப்படிப்பட்ட அறிவியல் பற்றி நாம் கவிதையில் சொல்வது நமது கடமையாகும்...
அதுவே நாம் நமது இளம் தலைமுறைக்கு சொல்ல போகும் பாடமுமாகும்...
இப்போது கவிதைக்குள் வருவோம்....
//இறகுதிர்ந்த பறவை
சலனமின்றி பறக்க
பறவை உதிர்த்த இறகு
வனங்களின் போர்வைகளை
தன் வரலாறு புவியியல்
கண்ணீரால் நனைக்க
டைனோசர் எலும்பொன்றை
கொறித்தபடி சிரித்தான் பித்தன். //
---------------------
வனங்களை அழித்து விட்டு வாழைத் தோப்புக்கு வேலி கட்டும் பித்தனைப் போலவே...
மர நடு விழாவுக்கு மரங்களை வெட்டி மேடையமைத்த மட பித்தன்களைப் போலவே...
மேற்கண்ட வரிகள் அதை நினைவு கூறிவிட்டு செல்கிறது...
இதில் அறிவியல் அர்த்தம் என்னவென்று சொன்னால்
இயற்கை அழித்தல் தொடர்ந்தால் இன்று
டைனோசர் எலும்பொன்றை கண்டதும் சிரித்த பித்தனைப் போல
வருங்காலத்தில் மனித எலும்பை கண்டும் ஏதோ பட்சி இப்படித்தான் சிரிக்கும் என்பது
அழிந்த மனிதனின் வாழ்வை / வழித் தடங்களை எண்ணி....
---------------------
//வரலாறு , புவியியலோடு
அறிவியல் அறிந்திருந்தால்
தொன்மா பட்டியலில்
எதுவும் தொலைந்து போகாது. //
---------------------
மனிதத்தையும் மானத்தையும் மானுடத்தையும் தொலைத்தவனுக்கு
தொன்மா தொலைந்ததெல்லாம்
தொலைந்த கணக்கில் வர வாய்ப்பே இல்லை....
இதில் அவரின் எதிர்காலம் எட்டிப் பார்க்கிறது
மனிதம் தொலைந்து விடக் கூடாது என்பது வரிகளில் சொல்லாமல் சொல்கிறது...
---------------------
//இறகுதிர்ந்த பறவை
இரைதேடி பரதேசம் செல்ல
வாடா விருட்சம் தேடிய
அன்னிய பட்சிகளின்
சொர்க்க பூமியாய்
பறவையின் சொந்தபூமி ஆக //
---------------------
அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் நாடு அவர்களிடத்தில் அடிமையாய் இருந்தது
இப்போது நாமே அவர்களிடத்தில் அடிமையாய் இருக்கிறோம்
ஆனால் தொழிற் புரட்சிஎன்று துண்டைப் போர்த்திக் கொண்டோம் நம் தலையில்...
இதில் அந்நிய முதலீடு / தலையீடு எப்படி நம்மை அழித்துக் கொண்டிருக்கிறது
என்பது சொல்லப் பட்டுள்ளது....
நம் வளங்களை நாமே அவர்களுக்கு அளித்து விட்டு அல்லது அவர்களுக்காக அழித்து விட்டு
மீண்டும் அந்நிய முதலாளிகளிடமே அடிமையாகி விடுவோமே என்ற கவலை வரிகளில் வருகிறது.
---------------------
//இறகுதான் பாவம்...
அதுவும் அறியாது
இதுவும் தெரியாது
சரணாலய காப்புறுதிகளை
கிணறுகளில் கோரிக்கொண்டு //
---------------------
இங்கு இறகு என்பது நாம்தான்... அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாய் இருக்கிறோம்... முடிவுகளை எடுக்கத் தெரியாமல் இன்னும்... படித்தும் படிக்கத் தெரியாதவனாய் நிற்கும்
அவலங்களை சொல்கிறது...
அதாவது இருளான ஒரு இடத்தில் தொலைத்த ஒரு பொருளை அங்கு வெளிச்சம் உண்டாக்கி தேடுவதை விட்டு விட்டு வெளிச்சமாக இருக்கிறது என்பதற்காக வேறு ஒரு இடத்தில் தேடினால் அந்த பொருள் அங்கு கிடைத்து விடுமா?
---------------------
//பறவையோ கோரம்...
அலகு மட்டும்
இரைகளை தேடியே
மரத்துப் புசித்திருக்க
இறகுகள் பறிபோயும்
அது இட்டுக் கொண்டிருந்தது,
பாரமான பொன்முட்டைகளை.//
---------------------
பங்கு சந்தைகளில் பங்குப் போட்டுக் கொண்ட நமது அறிவு
காப்பீட்டுத் திட்டத்தின் கடைசியாய் வந்த பணம் போல நமது கல்லறையை நாடி வரும் அல்லது தேடி வரும்...
ஆனால் பாடையில் இருக்கும் போது பொன் முட்டைகளாய் இருந்தாலென்ன வெண் முட்டைகளாய் இருந்தாலென்ன...?
பங்கு சந்தைகளைப் பற்றிய விழிப்புணர்வை தருகிறது வரிகள்...
---------------------
//இறகுதிர்ந்த பறவை
பலம் குறைந்து
சரியும் வேளைகளில்
சரியாக உணர்ந்திருந்தது.
தரைதட்டி விட்டால்
பறப்பன
ஊர்வனவாகிவிடும்.//
---------------------
இந்த வரிகளில் மொத்த கவிதையின் கருவும் கருத் தரித்து விட்டன அல்லது கருத் தெறித்து விட்டன
இது புரிந்தவர்களின் எண்ணப் படி...
---------------------
//உணர்ந்த பித்தன்களும்
ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர்
பறவைகளோடு இறகுகளை ..
எதிர்கால வேகத்தேவைகளின்
கணிப்பின் படி.//
---------------------
இங்கு ஆண்டியப்பனுக்கும் அப்துல் கலாமுக்கும் உள்ளது ஒரே அறிவுதான் ஒரே கணிப்புதான்
எவ்வளவு வேகத்தில் வேலையை செலுத்தினால் வீடு சேரலாம் என்பது ஆண்டியப்பனின் கணிப்பு
எவ்வளவு வேகத்தில் விசையை செலுத்தினால் விண்மீனை சேரலாம் என்பது அப்துல் கலாமின் கணிப்பு
இதுதான் அறிவு எப்படி அறிவியலுக்குள் செல்கிறது என்பதற்கான கணிப்பு...
---------------------
//எழுதி முடித்தபோது
இறகுகள் முளைத்திருந்தது
இங்கொரு பித்தனுக்கு...
புறாவுக்காக
சதைவெட்டிய இடங்களில் .//
---------------------
வெட்டிய இடத்திற்கும் ஒட்டிய இடத்திற்கும்
உள்ள வேறுபாட்டை இறகின் வலிமையே சாட்சியாக கூறும்...
அதாவது
அறிவில் அறிவியலை தொலைத்தவனுக்கும்
அறிவியலில் அறிவை தேடுபவனுக்கும் உள்ள
வித்தியாசத்தைப் போல... என்று முடித்துள்ளார்....
மிகச் சிறந்த படைப்பு தோழரே...
இப்படிப் பட்ட அறிவார்ந்த / அறிவியல் சார்ந்த படைப்புகளை நாம் இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல கடமைப் பட்டுள்ளோம்...
ஏன் நமக்கு தயக்கம் தோழர்களே...
நமக்கு அனைத்து அறிவியல் அறிவும் உள்ளது
அதை எப்படி பயன் படுத்துவது
அதை எப்படி கவிதைக்குள் புகுத்துவது
என்பதைப் பற்றி சற்று யோசித்தாலே போதுமானது...
அணுவைத் தேக்கி வைத்திருக்கும் அயல்நாடுகள் வல்லரசுகள் என்றால்
அறிவியல் அறிவைத் தேக்கி வைத்திருக்கும் இந்தியாவும் வல்லரசுதான்...
வாழ்க பாரதம்... வாழ்க பாரத மக்கள் !
=====================================================
வாழ்த்துக்கள் மற்றும் நன்றி திரு ராம் வசந்த் தோழர் அவர்களுக்கு....இப்படிப் பட்ட அறிவியல் சார்ந்த படைப்பை தந்தமைக்கு...