சாதி ஒழி மதம் அழி சாதி “பொங்கல் கவிதை போட்டி 2015”

ஆதியிலே சாதிக்கு ஆதாம் ஏவாள்
------- அடிபணிந்து சென்றிருந்தால் இந்த நேரம்
பீதியிலே நாமெல்லாம் செத்துச் செத்து
------- பிணமேடாய் குவிந்திருப்போம்; மானுடத்தில்
பாதியிலே உயிர்ப்பெற்ற சாதி பேய்கள்
------- பாழ்படுத்தும் கொடுமைகளால் நம்மையெல்லாம்
வீதியிலே கத்தியோடு ஓட வைத்த
------- வெறித்தனங்கள் இனிமேலும் தொடரலாமா?

எத்தனையோ பிரிவினைகள் வளர்த்துக் கொண்டு
------- எதிரிகளாய் வாழ்வதிலே அர்த்தம் இல்லை
செத்தாலும் சவக்குழியில் சாதி பார்க்கும்
------- சாத்தானாய் நிற்பதிலே அர்த்தம் இல்லை
பெத்தவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு
------- பிரார்த்தனைகள் செய்வதிலே அர்த்தம் இல்லை
நித்தமொரு உதவிகளை செய்யாமல் நாம்
------- நேர்த்திக்கடன் செலுத்துவதில் அர்த்தம் இல்லை

கோவில்களில் பைபிள்களை ஓதி பார்ப்போம்
------- கோமாதா குலமாதா எல்லாம்; மாதா
கோவில்களில் அர்ச்சனையாய் செய்து பார்ப்போம்
------- கொள்கைகளில் மழையாகப் பெய்து பார்ப்போம்
பாவிகளை மன்னிக்கும் தேவ தூதன்
------- மணியோசை மசூதிகளில் கேட்டுப் பார்ப்போம்
நாவினிலே மனிதகுலம் ஒன்றே என்று
------- நாம்கூறி ஒற்றுமையாய் வாழ்ந்து பார்ப்போம்

===========================================================
இந்தக் கவிதை என்னால் எழுதப் பட்டது என உறுதி அளிக்கின்றேன்.
முகவரி - #8, மதுரை வீரன் நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002
தமிழ் நாடு, இந்தியா.
அழைப்பிலக்கம் - +91 9739 544 544

எழுதியவர் : ஜின்னா (1-Jan-15, 6:45 pm)
பார்வை : 634

மேலே