சாதி ஒழி மதம் அழி சாதி - பொங்கல் கவிதைப் போட்டி 2015

அடுக்கடுக்காய் வீடுகள் கொண்ட
மலையடிவாரக் கிராமத்தின்
ஒடுக்கப்பட்ட கிணற்றினடியில்
பதுங்கி இருந்தான் , அவன்


தூரத்து மலை இருட்டில்
கரிய நிறம் மறந்த காக்கைகள்
செங்குருதி மண்ணில்
புழுதி கொத்திக் கொண்டிருந்தன


வரிசையில் , கடைசியாய்
நின்று கொண்ட , அவனுக்கு
ஈக்கள் மொய்த்த
கொட்டாங்குச்சியும் மறுக்கப்பட்டது


வவ்வால்கள் வட்டமடித்த
சிதிலமடைந்த கோயில் வாசலில்
விளையாடிக் கொண்டிருந்தது
செருப்பணியாத அந்தக் குழந்தை


பிணங்கள் மறுக்கப்பட்ட
தெருவொன்றில் - செங்குத்தாக
நின்றிருந்த அந்தத் தேரில்
கண்மூடிச் சரிந்திருந்தான் அவன்


கற்குகைக்குள் ஒடுங்கிக்கொண்ட ,
முண்டாசு கட்டிய அவன்
முனகிக் கொண்டிருந்தான்
"சாதிகள் இல்லையடி பாப்பா"



- கிருத்திகா தாஸ்...

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (3-Jan-15, 5:15 pm)
பார்வை : 475

மேலே