உன்னருகே நானிருந்தால்
உன்னருகே நானிருக்கும் நேரமதில்
பொங்கிடும் இன்பமும் அழகும்
உலக அதிசயங்களை மிஞ்சும்!
ஆம்! அந்நேர அழகை
வெளியிட விரும்பாததால்
அளவிட வரைமுறை இல்லாததால்
அதிசயங்களில் இடம்பெறாமல் போனது!
உனது நெளிவு சுழிவுகளில்
விழுந்து எழுந்து மறைந்து போனேன்!
உன் மூச்சு உணரும் அருகாமையில்
வெப்பத்தால் மனம் குளிர்காய்கிறது!
உன்னைப் பார்க்கும்போது
மட்டும் எனக்குள்
அநாகரிகம் தலைவிரித்தாடுகிறது!
உன் மேல்நெஞ்சை
மறைப்பதில் வெற்றிகண்ட நீ,
உன் உள்நெஞ்சில் நானிருப்பதை
மறைப்பதில் தோற்றதை மறைக்க
பூஞ்சிரிப்பில் என் நெஞ்சில்
உன் நெற்றி பதிப்பாயே! -- அதில்
மனம் புதைந்துபோகிறது!
பஞ்சும் நெருப்பும் அருகருகே
இருந்தால் பற்றிக்கொள்ளுமாம்,
பற்றிக்கொண்டால் பஞ்சு
எரிந்து அழிந்தல்லவா போகும்!
உன்னருகே நானிருப்பது
பஞ்சும் நெருப்பும் அல்ல
நீரும் தாகமும் போலவே!
உன்னருகே நானிருப்பதால்
நான் நீ நாமாகி யாதுமாகி
யாக்கையின் அர்த்தம் விளங்கி
பிறப்பியல் வாழ்வியல் பாடுகளை
ஒன்றெனப் பகிர்ந்துப் பார்ப்போம் வா...!