முகவரித் தொலைத்த முதல் சந்திப்பு

என்
மன ஓட்டத்திற்கு
சற்றும் பொருந்தாது
அதிவேகத்தில் புகை உமிழ்ந்தபடி
போய்க்கொண்டிருந்தது பேரூந்து....

நினைவுகளை முன்னிழுக்கும்
பெருமுயற்சியில் தோல்வியுற்றுத்
தொலைந்துப்போ யிருந்தேன்
"சில வருடங்களுக்கு முன்"....

உறவற்ற குழைந்தைகளுக்காக
உதவித்தொகை வாங்க வந்து
உன் முன்னுரையில் - என்
முகவரித் தொலைத்த முதல் சந்திப்பு....

நீயாகவே முன்வந்து
நிகழ்த்திட்ட சந்திப்புகளில்
நீடித்த நட்பொருநாள்
நிறைவானது காதலாக....

திரையரங்கு கடற்கரை தவிர்த்து
கோவில்கள் பூங்கா விடுத்து
சிங்கார சென்னையில் -நாம்
சுற்றாத நூலகமேது..?

ஆசையோடு நான் கேட்கும்
அத்தனையும் கிடைத்துவிடும்
அழுகையென்ற சொல்லைக்கூட
மறந்துக்கிடந்தேன் நானும்....

நானில்லா நேரத்திலும்
நீயிருந்து கவனித்தாய்
இன்னொருப் பிள்ளையென்றே
என் தாயும் பூரித்தாள்...

எது உண்மை..? எது பொய்..?
யார் சரி..? யார் தவறு..?
சுதாரித்துக் கொள்வதற்குள்
சகலமும் முடிந்திருந்தது....

இதேபோன்றொரு பயணத்தில்தான்
எதிர்பாராது தென்பட்டது

இன்னாரோடு இன்னாருக்கு
இருவீட்டார் சம்மதத்தில்
இனிதே திருமணமாம்
வாழ்த்து சொல்ல வாருங்களென்ற
நண்பர்களின் விளம்பரப் பட்டிகை....

நிஜங்கள் சிதறி
நினைவுகளாகிப்போன - என்
காதலின் இறந்தநாளெண்ணி
சலித்துக்கொண்ட அதே நேரம்....

எனக்கான நிறுத்தம் வர
பேரூந்தைவிட்டி றங்கி
கடமைகளை நோக்கிச்செல்கிறேன்
நீ விட்டுச்சென்றத் தனிமையில்....

எழுதியவர் : யாழ்மொழி (21-Jan-15, 2:37 pm)
பார்வை : 659

மேலே