வீதி வாசிகள்

வீதி வாசிகள் நாங்கள்
விதியின் வாசிகள்!
ஒளியும் ஒலியுமாகத் தான்
எங்களின் விடியல்!
டீக்கடைச் சத்தமும்,
வண்டிகளின் சத்தமும்,
விளக்குகளுடன் போட்டியிட்டு,
சூரிய ஒளியும்
விடியலை வாசித்துச் செல்லும்.

அழுக்கான ஆடையை
அலசிப் போட்டு,
அங்கேயேக் குளித்து,
அம்மா செய்த
எதையோ தின்று,
அங்கேயே உறங்கிவிடும்
நாங்கள்
வாழ்வின் விடியலை மட்டும்
வண்ணக் கனவுகளாகத்தான் காண்கின்றோம்.

உண்ண உணவும்,
உடுக்க உடையும்,
இருக்க வீடும்,
குடிக்க நீரும்,
வாழ்வாதாரத்திற்கு படிப்பும்
தேவையென்றால்
இத்தேவைகளுக்காக
இவற்றில் சிலவற்றை
தியாகம் செய்ய நேரும் நாங்கள்
விதியின் வாசிகள் தானே!

மழையும்,வெயிலும்
மாறி மாறித் துரத்தும் போதும்,
மாற்றி யோசித்தலே சாகசமாய்
பாலிதின் கவரி குடையும்,
கிழிந்த சேலைப் போர்வையும்,
ஒட்டுப் போட்ட ஆடையிலும்
தீபாவளியையும்,பொங்கலையும்
சந்தோஷமாக மாற்றிடும் நாங்கள்
விதியின் வாசிகள் தானே!

முகவரிகள் அழிந்த
கடிதங்கள் யாம்! அதனால் தான்
இறைவனின் இருதய அறைக்குச்
செல்லவில்லை எங்கள் கண்ணீர்
என்றேனும் எங்கள் கூடாரம்
ஏற்குமோ கதவு?
என்றேனும் எங்கள் கூடாரம்
களித்திடுமோ பொருட்குவியலில்?

இந்தப் பழையப் பானையும்,தட்டும்
எங்கள் விதியின் விளம்பரங்களானதால்,
வெறுத்திடும் எம்மனதும்
விதியின் வாசிகள்
என்பதுணர்த்தி வாழ்க்கையை
விதியின் ஒரத்திலேயே
வாழ்ந்திடச் செய்கிறது.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (30-Jan-15, 2:27 pm)
Tanglish : viidhi vaasikal
பார்வை : 118

மேலே