அப்பாவின் அமைதி

சின்னஞ் சிறு வயதினில்
எனைத் தூக்கிக் கொஞ்சியது
கொஞ்சமும் நினைவில்லை
பதின்ம வயது வரை
எனை நீராட்டிய நினைவுண்டு!

குழந்தைப் பருவத்தில்
அன்பூட்டிய நினைவில்லை
கிழவியாகும் வரை
எனை ஒரு நாளும்
காணாதிருக்கவில்லை!

அம்மாவிடம் காணா அன்பை
அப்பாவிடமே கண்டேன்
அப்பாவிடம் இல்லா பயத்தை
அம்மவிடமே கொண்டேன்!

அம்மா செல்வி என்றே
அன்பொழுக அழைத்து
அனுதினமும் என் முன்னே
அமைதியாக வலம் வந்த
எனதருமை நாயகன்!

என்ன துன்பம் நேரிடினும்
உங்களன்பால் நான் மீண்டேன்
உங்களை மீட்டுப்பெற
நான் ஏனோ தவறினேன் ;
நாள் தோறும் தவிக்கின்றேன்!

திட்டியதாக ஒரு சொல்
அகராதியிலும் இல்லை
வாழ்த்திய சொல்
என் நெஞ்சமெல்லாம் தஞ்சம்
கடவுளுக்கு ஏனிந்த வஞ்சம்?

பத்திரிக்கையில் என் படைப்பு
பூரிப்பு உங்களுக்கு
என் பெயருக்குப் பட்டமளிப்பு
உங்கள் உள்ளத்திலே களிப்பு !

மருத்துவப் படுக்கையில்
பலமுறை படுத்தவர்
பத்திரமாக வந்திடுவார் என்றே
பற்றியிருந்த உங்கள் கைகளை
அகற்றி நானும் விடைபெற்றேன்!

எனது நிழல் அகன்றதும் காலண்
எழுந்து வந்திடுவான்
என்று நானும் அறிந்திருந்தால்
எனதுயிர் தந்து
என் தெய்வம் மீட்டிருப்பேன்!

அம்மாவின் கண்ணீர்
தம்பியின் அழுகுரல்
தங்கைகளின் கதறல்
மருமக்களின் வேதனை
பேரக்குழந்தைகளின் தவிப்பு !

மூன்றாண்டுகள் ஆனபின்னும்
முடியவேயில்லை
மூடிய உங்கள் விழிகளில்
முடியாத அன்பை இன்றும் காண்கிறோம்!

எனக்கு அப்பா இல்லை
என்றானபின் தான்
அப்பா இல்லா என் பிள்ளைகளின்
கலக்கம் நான் உணர்ந்தேன்!
தவறு எனதல்ல !

என் அப்பாவைப்போல்
நல்ல அப்பா அவர்களுக்குத்
தந்திடாத இறைவனே குற்றவாளி!

அமைதியான அன்பு முகம்
மாறாத அன்பு மனம்
இறைவன் தந்த பரிசு
இப்பிறவியன்றி எப்பிறவியாயினும்
அவரே எனக்குத் தந்தையாக
மீண்டும் வரம் வேண்டும் !

எழுதியவர் : தமிழ்ச்செல்வி த/பெ கோவிந் (6-Feb-15, 7:57 am)
Tanglish : appavin amaithi
பார்வை : 126

மேலே