காதல் யாத்திரிகன்
சைபீரியாவின் குளிரிலும், பனியிலும் நடுங்க,
சஹாராவில் கானல் நீரைக் காண,
ஆல்ப்ஸில் பனிச்சறுக்கு விளையாட,
ஜப்பானில் தேநீர் அருந்த,
லாஸ் வெகாஸில் சூதாட்டம் விளையாட,
கென்யாவில் சஃபாரிக்க, சீனத்தில் சாப்பிட,
ப்ரிஸ்பேனில் கடலில் பவளங்களை பார்க்க,
உலகம் எல்லாம் சுற்றி அனுபவிக்க, ஆனந்திக்க,
ஆசை கொண்டிருந்ததென்னவோ உண்மை!
ஆனால், ஊரை விட்டு நகராமல்,
உன்னையே சுற்றிக் கொண்டிருந்து விட்டேன்.
உன்னை முதலில் கண்ட போது
நார்வே நள்ளிரவின் ஆரோரா போரியாலிஸ்ஸோ-
வானத்தின் வண்ணக் கலவையோ என்று அசந்து விட்டேன்.
உன்னோடு பழகின புதிதில், சிறு சிறு உரசல்கள்,
ப்ரேசிலின் கால்டாஸ் நேவாஸ் வெப்ப நீர் ஊற்றுகளில்
நனைந்து குளித்த உணர்வை தந்தன.
உனது புன்னகை, சிரிப்பு, கொஞ்சும் குரல்,
சுவிஸ் மவுன்ட் பிளாடஸ்ஸில் மலையேறும் போதையை
டாஹிடி, ஹவாய், பாலி கடற்கரைகளின் சிலிர்ப்போடு
கலந்து காக்டெய்லாக வழங்கின.
காதலில் மெய்மறந்து கை கோர்த்து உறவாடின போது
கனடாவில், ந்யூ ஜிலாந்தில் பனிச் சறுக்கு,
விக்டோரியா நீர்வீழ்ச்சியில் துடுப்பு படகு,
அரேபியாவின் மண் புயலில் ஒட்டக சவாரி,
பாராசூட்டில் அதை விரிக்காமல், குதித்தல்,
அன்டார்டிகாவில் பென்குவின்களோடு கலகலப்பு
ஆஹா! ஆர்க்டிக் டால்பின்களோடு நீச்சல்!
பெண்ணே! உன்னைச் சுற்றும் யாத்திரிகனான எனக்கு
ஏனோ உறவின் நீச்சங்களையும் உணர்த்தினாய்!
என் மேல் சினம் கொண்டாய், சீறினாய்!
எரிமலை, பூகம்பம், சூறாவளி, சுனாமி, வெள்ளம்!
பஞ்சம், எபோலா, புற்றுநோய், மனிதநேயமின்மை!
பயந்து, பரிதவித்து விட்டேன் நான்,
முத்து குளிக்க போனவன், மூச்சு திணறிவிட்டேன்!
உன்னை, உலகை சுற்றியது போதும்!
பெண்ணை, பொன்னை நாடியதும் போதும்!
என்னுள் எனைக் காண கண்ணை மூடினேன்.
ஓரொளியாக மிளிர்ந்த நீ, பலவாக மாறி,
நான்தான் என்று விண்மீன்களாக கண் சிமிட்டுகிறாய்!
உன் அழகு பிரபஞ்சமாக விரிகின்றது, விளிக்கின்றது.
ஹப்ள் டெலஸ்கோப்பில் உன்னை படிக்கிறேன்!
ஹூஸ்டனிலிருந்து ஏவுகணையாக யத்தனிக்கிறேன்!
பெண் ஒருத்தியை உளமார காதலித்தாலே போதும்!
உலகம் என்ன, பிரபஞ்சமெல்லாம் சுற்றி விடுவோம்!
என் செய்வது! பூமியும் பெண்தானே!
பெண்ணின் இயல்பே நம்மை சுற்றலில் விடுவதுதானே!