எட்டாத அறிவியப் புலன் -ரகு
தட்டானின் சிறகுகளைத்
தட்டிப்பறிக்க இயலாத
நிலைதான்
வானுயர அறிவியலின்
வரலாற்று வளர்ச்சி !
ஓரறிவுப் பிழை மறந்து
உலகமளப்பவைகளின்
பேராச்சர்யங்களை
மூலையில் உட்கார்ந்தே
மூளைக் கசக்குகிறது
விஞ்ஞானம் !
தலைகுப்புறத் தொங்கியபடி
வவ்வால்கள்
திசையறிவதும்
கும்மிருட்டில் ஆந்தைகள்
குழி காண்பதும்
மைல்கள் கடந்தேகும்
மோப்ப சக்தியும்
கிராம் எடையாயினும்
கண்டம் கடப்பதும்
அறிவியப் புலன்கள்
அறியா வண்ணம்
உலகம் திரையிட்டு
மறைத்துக்கொண்ட
ஒப்பற்ற அதிசயங்கள்!
இருட்டை கிழிக்கும் ஒளியை
உச்சிப் பகலில் ஒளிரவிட்டு
நாம் ஏழாமறிவை
வளர்த்துகொண்டிருக்கும்
அதேவேளையில்
குழிபறித்து மலங்கழித்து
மூடிக்கொண்டிருக்கிறது
புதருக்குள் ஒரு பூனை !